கண்ணமங்கலம் அருகே கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் 8 கி.மீ. பயணித்த இளைய தலைமுறையினர்

*பக்தர்கள் வியந்து பார்த்தனர்

கண்ணமங்கலம் : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்னப்புத்தூர் மாரியம்மன் கோயில் கூழ்வார்க்கும் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரசித்திப்பெற்ற இத்திருவிழாவிற்கு பல்ேவறு மாவட்டங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சின்னப்புத்தூரிலிருந்து சுமார் 8கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ராமசாணிக்குப்பம் கிராமத்திலிருக்கும் இளைய தலைமுறையினர் ஆண்டுதோறும் பாரம்பரியமுறைப்படி மாட்டு வண்டியில் விழாவிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்படி இந்தவருடம் நடைபெற்ற விழாவிற்கு மாட்டு வண்டியில் வந்தனர். அவர்களை பக்தர்கள் வியந்து பார்த்தனர்.
இதுகுறித்து மாட்டுவண்டியில் பயணித்த இளைய தலைமுறையினர் கூறியதாவது:

மோட்டார் வாகனங்கள் வருவதற்கு முன் பண்டைய காலத்தில் மாட்டு வண்டிகளே சரக்கு வாகனமாகவும், பயணிகள் வாகனமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பயன்பாடு குறைந்து வந்தாலும் மாட்டு வண்டிகளை பேணிகாப்பதை சென்ற தலைமுறையினர் ஒரு கவுரவமாக கருதுகின்றனர்.

மேலும் மாட்டு பொங்கல் நாளையொட்டி மாட்டு வண்டிகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வணங்கப்படுகின்றன. பண்ட போக்குவரத்து தவிர, பயணிகள் போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. திருவிழாக்காலங்களில் வண்டி கட்டிக்கொண்டு முழுக் குடும்பமும் விழாவுக்கு செல்வர். இரவு வேளைகளில் கூத்து பார்க்கச் செல்வோர் வண்டிகளையே இருக்கையாகவும் படுக்கையாகவும் கொள்வர்.

இவ்வாறு பயணிகள் போக்குவரத்திற்குச் செல்லும்போது, பயணம் சுகமாக இருக்க வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்பர். சில சிற்றூர்களில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெறுவதும் உண்டு. வேலைக்கு பயன்படாத காலங்களில், சிறுவர்கள் ஏறி விளையாடும் பொருளாகவும் மாட்டு வண்டி பயன்படுகிறது.
விஞ்ஞான வளர்ச்சியில் குறைந்து வந்த மாட்டு வண்டிகள், நாளடைவில் காணாமலேயே போய் கொண்டிருக்கிறது. இதனால் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும், வித்தியாசமான இந்த பயணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காகவும் நாங்கள் ஆண்டுதோறும் சின்னப்புத்தூர் கிராமத்திற்கு மாட்டு வண்டியில் வந்து செல்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post கண்ணமங்கலம் அருகே கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் 8 கி.மீ. பயணித்த இளைய தலைமுறையினர் appeared first on Dinakaran.

Related Stories: