நாகர்கோவிலில் சிறுவர்கள் ஓட்டிச்சென்ற விலை உயர்ந்த 10 பைக்குகள் பறிமுதல்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் சிறுவர்கள் ஓட்டிச்சென்ற 10க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்குகளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. சென்னையுடன் ஒப்பிடுகையில் விபத்து உயிரிழப்புகள் குமரி மாவட்டத்தில் அதிகம் . அண்மையில் நாகர்கோவிலில் நடந்த சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் விபத்துகள், உயிரிழப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இரு சக்கர வாகனங்களில் 2க்கும் மேற்பட்டோர் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, பைக்குகளில் அதிக சப்தம் எழுப்பும் சைலென்சர்கள் பொருத்தி இயக்குவது, ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்வது, மற்றும் அதிக லோடுடன் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் எ.வ.வேலுவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியிருந்தார். இதனை போன்று கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் நுழைகின்றவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கனிம வளங்கள் ஏற்றிச்செல்கின்ற டாரஸ் லாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு பறிமுதல், அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.இதனை போன்று நாகர்கோவிலில் விலை உயர்ந்த பைக்குகளுடன் சுற்றித்திரியும் சிறுவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

அந்த வகையில் நேற்று நாகர்கோவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுமித் ஆல்ட்ரின், செல்லசாமி ஆகியோர் நடத்திய அதிரடி சோதனையில் சிறுவர்கள் ஓட்டிச்சென்ற 10க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பப்டடன.மேலும் இந்த பைக்குகள் பலவற்றில் அதிக சப்தம் எழுப்பும் சைலென்சர் பைப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவற்றுக்கான உரிமையாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறியதாக ₹5 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டி வரும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
தற்போது பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு நாகர்கோவில் கோட்டாரில் உள்ள போக்குவரத்து காவல்நிலையத்தில் நிறுத்திவிடப்பட்டுள்ளன.

₹25 ஆயிரம் அபராதம் ஏன்?

தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 2019ம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199(ஏ)ன்படி உரிய ஓட்டுநர் மற்றும் பழகுனர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வாகனங்களை ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ₹25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகைகள் உள்ளது. மேலும் அவ்வாறு வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெறுவது நிறுத்தி வைக்கப்படும். இந்த விதிகளை போலீசார் பெரும்பாலும் பயன்படுத்தாமலேயே உள்ளனர். தற்போது இந்த விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நாகர்கோவிலில் சிறுவர்கள் ஓட்டிச்சென்ற விலை உயர்ந்த 10 பைக்குகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: