பட்டுக்கோட்டை அருகே கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் டெல்டா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்..!!

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே விடுமுறையை கொண்டாடும் வகையில் டெல்டா கடற்கரையில் குடும்பத்துடன் ஏராளமானோர் குவிந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள புதுப்பட்டினம் டெல்டா கடற்கரைக்கு நேற்று காலையில் இருந்து அந்த பகுதி மக்கள் சாரைசாரையாக படையெடுக்க தொடங்கினர். ஞாயிறு விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட கூடுதலாக மக்கள் கூட்டம் காணப்பட்டது. கொளுத்தும் கோடை வெயிலை கண்டுகொள்ளாத மக்கள், மணலில் அமர்ந்து குடும்பத்துடன் ஓயாத அலைகளை பார்த்து ரசித்தனர். வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற நொறுக்கி தீனிகளை சாப்பிட்டதுடன் உற்சாகமாக குதிரை சவாரி செய்தனர். பலர் கடலில் ஆனந்தக்குளியல் இட்டனர்.

கோடை வெப்பம் கடுமையாக இருந்தாலும் குடும்பத்துடன் கடலில் இறங்கி குளிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வாகனங்களில் டெல்டா கடற்கரையை நோக்கி படையெடுத்ததால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு தலமாக டெல்டா கடற்கரை உள்ளதால் அங்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பட்டுக்கோட்டை அருகே கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் டெல்டா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: