கோர விபத்தின் அதிர்ச்சி.. இன்னும் மீள முடியவில்லை…சென்னை திரும்பிய பெண் பயணி உருக்கம்

சென்னை: எனது வாழ்நாளில் இதுபோன்ற ரயில் விபத்தை பார்த்ததே இல்லை என தலையில் அடிபட்டு உயிர் தப்பிய சென்னை பயணி உருக்கமாக தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த சென்னையை சேர்ந்த தரணி என்பவர் கூறியதாவது: டிரைவர் வேலை செய்து வருகிறேன். வேலை விஷயமாக மேற்கு வங்காளத்திற்கு சென்று விட்டு கோரமண்டல் ரயிலில் முன் பதிவு செய்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் பெட்டி கீழே விழுந்தது. பெட்டியில் இருந்தவர்கள் எல்லாரும் தூக்கி விசப்பட்டனர். நானும் தூக்கி வீசப்பட்டேன். எனக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. வெளியில் வந்து பார்த்தால் ரயில் பெட்டிகள் சுக்குநூறாக உடைந்து கிடந்தது. பல பேர் இறந்து கிடந்தனர். பெட்டி முழுவதும் ரத்தம். என்னால் அதனை சொல்லமுடியவில்லை என உருக்கமாக கூறினார்.

இதேபோன்று தாம்பரத்தை சேர்ந்த சிவரஞ்சனி கூறுகையில், ‘‘எனது கணவர் அசாமில் வேலை பார்த்து வருகிறார். எனது மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து நானும் எனது மகளும் கணவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று ஒரு மாதம் தங்கி இருந்தோம். 7ம் தேதி பள்ளி திறக்கப்படவுள்ளதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான், எனது மகள், கணவரின் நண்பர் குடும்பத்தினருடன் இரண்டடுக்கு ஏசி பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தோம். திடீரென பெரிய சத்தம் கேட்டது. ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பெட்டிகள் கீழே விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டிருந்தது. எப்படியாவது உயிர் தப்பினால் போதும் என நினைத்து உடைந்த பெட்டியில் இருந்து வெளியே வந்தோம். சென்னை வந்த பிறகுதான் நிம்மதி வந்தது. இந்த கோர ரயில் விபத்தின் தாக்கத்தில் இருந்து சிறிது காலம் என்னால் மீளமுடியாமல் இருக்கும்’’ என்றார்.

The post கோர விபத்தின் அதிர்ச்சி.. இன்னும் மீள முடியவில்லை…சென்னை திரும்பிய பெண் பயணி உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: