ஒடிசா ரயில் விபத்தில் தமிழக ரயில் பயணிகள் இறக்கவில்லை சென்னைக்கு வந்த பயணிகளில் 8 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 

சென்னை: ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயிலில் சென்னை வந்தவர்களில் காயமடைந்த 8 பேருக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2ம் தேதி இரவு மூன்று ரயில்கள் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 867 பேர் ரிசர்வேஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்தினைத் தொடர்ந்து தமிழக பயணிகள் மீட்கப்பட்டு சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சனிகிழமை காலை 8.30 மணிக்கு தமிழ்நாடு, பயணிகள் 137 பேருடன் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது.

மேலும், ரயில் விபத்தில் காயமடைந்த 8 பேர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்றவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு ரயிலில் வந்த பயணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒடிசாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு இரவு சிறப்பு ரயில் சென்னை வரும் அறிவிக்கப்பட்டவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின், வருவாய்துறை அமைச்சரையும் என்னையும் இங்கு உடனடியாக போகச்சொல்லி, தேவையான உதவிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினார்.

அதன்படி நானும் வருவாய் துறை அமைச்சர் மற்றும் 2 துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும் வந்துள்ளனர். அவசர சிகிச்சைக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 மருத்துவர்கள், 30 மருத்துவ பணியாளர்கள் இருந்தனர். ரயிலில் வந்தவர்கள் 137 பேரில் 8 பேர் காயம் அடைந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர். 2, 3 பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். கார்த்திகேயன் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பயணிகளையும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தேவையான முதல் உதவி சிகிச்சை அளித்து, பேருந்துகளில் அவரவர் ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக குழு தொடர்ந்து பேசி வருகிறது. ஒடிசாவில் இருந்து ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் 4 பேரும் விமானம் மூலம் சென்னை வந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் தமிழக ரயில் பயணிகள் இறக்கவில்லை சென்னைக்கு வந்த பயணிகளில் 8 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: