சேலம்காரரை ரகசியமாக சந்தித்த காக்கிகள் பற்றிய லிஸ்ட் ரெடியாகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியின் மாஜி அமைச்சர் மீது கோபத்தில் இருக்கும் நபர்களை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்றும் முடியும் மாவட்டத்தில் இலைக்கட்சியில் மாஜி அமைச்சர், சமூக ரீதியாக செயல்படுவதாக பல்வேறு புகார்கள் உள்ளதாம். கட்சியினருக்கு பதவி வழங்குவதும், ஆட்சியில் இருந்தபோது தன்னுடைய சமூகத்தினருக்கு மட்டும் அரசு பதவிகள் வழங்கியதும் அதிருப்தியை ஏற்படுத்தியதாம். தேர்தல் தோல்விக்கு பிறகும் பாடம் கற்காத அவர், இதே பாணியை கடைபிடித்து வருகிறாராம். சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த மாஜி அமைச்சரின், உதவியாளர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த செய்தியாளர்களை மட்டுமே அழைத்து இருந்தாராம். அவர்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்தாராம். மேல்பாதி கோயிலின் உள்ளே பட்டியல் இன மக்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி, நான் இதன் பின்னணியில் இல்லையென காட்டிக்கொண்டிருக்கிறாராம். மேல்பாதி சம்பவம் குறித்து அனைத்துக் கட்சிகள் ஆட்சியரை சந்திக்க உள்ள நிலையில் மாஜி அமைச்சர் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறாராம். மேல்பாதி சம்பவத்தில் அனைத்துக் கட்சியினர் ஒன்று திரண்ட நிலையில் இவர் மட்டும் ஒதுங்கிக் கொண்டாராம். அதை பார்த்த மக்கள் இப்போது தப்பித்து இருக்கலாம். தேர்தலில் எங்களை சந்தித்துதான் ஓட்டு கேட்க வேண்டும். அப்போது பார்த்து கொள்கிறோம் என்று ஆவேசமாக கூறினராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காலில் செருப்பு கூட போடாமல் சட்டசபைக்கு வந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர் உதயமானவர் சேலம்காரர் மீது ஏன் கோபத்தில் இருக்கிறாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஒற்றைத்தலைமை பிரச்னையால், இலை இரண்டு அணியாக பிரிந்தது. ஒருங்கிணைந்து இருந்தபோது, இலை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சேலத்துக்காரரும், துணைத்தலைவராக தேனிக்காரரும் தேர்வு செய்யப்பட்டார்களாம். இதற்காக சபாநாயகரிடம் அனுமதி பெற்றனர். இவர்கள் இரு அணியாக பிரிந்தவுடன் பொதுக்குழுவை கூட்டி, தேனிக்காரரை கட்சியில் இருந்து சேலத்துக்காரர் நீக்கிவிட்டார். இதனால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்தும் அவரை நீக்க வேண்டும். அதற்குப்பதிலாக அவரது சமூகத்தை சேர்ந்த, மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் அமைச்சர் உதயமானவரை, துணைத்தலைவராக அறிவிக்க வேண்டும் எனக்கோரி, சட்டமன்ற செயலாளரிடம் சேலத்துக்காரர் மனு கொடுத்துள்ளார். மனு பரிசீலனையில் உள்ளது. தற்போது வரை, இலை சட்டமன்ற உறுப்பினர்களின் துணைத்தலைவராக தேனிக்காரர் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இது முன்னாள் அமைச்சர் உதயமானவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. முறையான அறிவிப்பு சட்டமன்றத்தில் இருந்து இன்னும் வரவில்லை. உதயமானவருக்கு துணைத்தலைவர் பதவி வாங்கிக்கொடுப்பதில் தீவிரமாகவும், ஆதரவாகவும் சேலத்துக்காரர் செயல்பட்டார். ஆனால், முறையான அறிவிப்பு இல்லாததால், இன்னும் அவரை முன்னாள் அமைச்சர் என்றே அழைத்து வருகின்றனர். துணைத்தலைவர் பொறுப்பை வாங்கித்தர சேலத்துக்காரர் தனக்கு ஆதரவாக தீவிரம் காட்டவில்லை என்றும், மெத்தனமாக செயல்படுகிறார் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் உதயம் புலம்புகிறாராம். நான் தான், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்று 8 மாதமாக அறிக்கை வெளியிட்டும் எவ்வித பயனும் இல்லையே என சேலத்துக்கார் மீது உதயமானவர் கோபம் கொண்டும், தனது ஆதரவாளர்களுடன் நொந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி புலம்பிக் கொண்டே இருக்கிறாராம் உதயமானவர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சிக்காரரை சந்தித்த மூணு காக்கி அதிகாரிகள் யார் என்ற விசாரணை நடக்குதாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத நிலைதான் மாங்கனி மாநகரில் இருக்குதாம். இலைக்கட்சிக்குள்ளே யார் தலைவர் என்கிற மோதலில் சேலத்துக்காரரின் கை ஓங்கியிருச்சு. பொறுப்புக்கள் அவரிடம் வந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருக்காரு. அப்போ மாநகர காக்கி அதிகாரிகள் ரகசியமா சந்திச்சு பேசினாங்களாம். அதுவும் 3 அதிகாரிகள் மப்டி உடையில் போயிருக்காங்க. இவர்களை இலைக்கட்சி நிர்வாகி ஒருவர் காரில் அழைச்சிக்கிட்டு போனாராம். போன வேகத்துல காலைத்தொட்டு கும்பிட்டாங்களாம். நீண்ட நேர சந்திப்புக்கு பிறகு வந்தவழியே யாருக்கும் தெரியாம கார் ஏறி போனாங்களாம்.

அதெப்படி ஆட்சி மாறிய நிலையில் இந்த சந்திப்பு எப்படி நிகழ்ந்திருக்குமுன்னு பார்த்தா, இலைக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதுக்காக போய் வாழ்த்து சொல்லபோனதாக சொல்றாங்களாம். இந்த ரகசிய சந்திப்பு எந்த வகையிலும் யாரும் கண்டு பிடித்து விடக்கூடாதுங்கிறதுக்காக செல்ேபானை அவர்களின் அலுவலகத்திலேயே வச்சிட்டு போனதாக சொல்றாங்க. அதே போல முக்கிய தகவலை அவருக்கு சொல்றதும் அவங்கதான்னு மாங்கனி மாநகர காக்கித்துறையில் சலசலப்பு எழுந்திருக்காம். இந்த சந்திப்பு நடந்தது உண்மைதானா என்பதை கண்டுபிடிச்சு நிரூபிப்பதற்கான முயற்சியில் காக்கியின் மற்றொரு குழு இறங்கியிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா ‘‘எந்த மாஜி மந்திரிக்கு பிபி எகிறிடுச்சாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் சேலத்துக்காரரும், தேனிக்காரரும் தனித்தனியே அரசியல் செய்யுறாங்க. அதனால, கட்சியில் நாம் இருப்பதை காட்டுவதற்காக சேலத்துக்காரர் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினாரு. அதுல, கிரிவலம் மாவட்டத்துல நடந்த ஆர்ப்பாட்டத்துல, விவசாயி பெயர் கொண்ட மாஜி மந்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடந்துக்கிட்டு இருந்தபோது, திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்த மாஜி மாவட்ட செக்ரட்ரி ஒருத்தரு, தனி கோஷ்டியாக போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினாரு. கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த மாஜி மாவட்டம், திடீரென கூட்டம் சேர்த்துட்டு வந்ததை பார்த்த மாஜி மந்திரிக்கு பிபி எகிறிவிட்டதாம். சேலத்துக்கு மிக நெருக்கமாக உள்ள தனக்கு போட்டியாக எப்படி வரலாம் என்று, கொதித்த மாஜி மந்திரி, விரைவில் மாஜி மாவட்டத்தை கட்சியில் இருந்து கட்டம் கட்டுறேன் பாருன்று சபதம் போட்டிருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

 

The post சேலம்காரரை ரகசியமாக சந்தித்த காக்கிகள் பற்றிய லிஸ்ட் ரெடியாகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: