புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் தலைமையில் இன்று விவாதம்

சென்னை: புதிய தேசிய கல்விக்கொள்கையை குறித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலை கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் பல அம்சங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை செய்ய நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்துகிறார். இதையொட்டி நேற்று ஆளுநர் ரவி சென்னையில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார்.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன் பின்னர் கோத்தகிரி வழியாக இரவு 7.10 மணிக்கு ஊட்டி ராஜ்பவனை சென்றடைந்தார். இதனைத்தொடர்ந்து இன்றைய தினம் ஊட்டி ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் புதிய தேசியக் கல்விக்கொள்கை பற்றி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கருத்தரங்கம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உயர் கல்விக்கு தேவையான நூல்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள உயர் படிப்புகளில் தமிழ் மொழியை ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் தலைமையில் இன்று விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: