சென்னை, கோவை, திருச்சி சேலம் என பல இடங்களில் 500 நகர்ப்புற மையங்களை நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, கோவை, திருச்சி சேலம் என பல இடங்களில் 500 நகர்ப்புற மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்த வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117க்குட்பட்ட விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி : தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவையை பெற்றிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் 2022-2023-ல் 7.5.2022 அன்று சட்டசபை அறிவிப்பு எண்-110ன்படி 708 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தமிழ்நாட்டில், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 2021-2022ம் ஆண்டில் 593 மையங்கள், 2022-23 ஆண்டில் 115 மையங்கள் என மொத்தம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டு அவைகளின் கட்டிட வசதி, மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140, கோவை மாநகராட்சியில் 50, மதுரை மாநகராட்சியில் 46, திருச்சி மாநகராட்சியில் 25, சேலம் மாநகராட்சியில் 25, திருப்பூர் மாநகராட்சியில் 25 மற்றும் நகராட்சி பகுதிகளில் 189 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை மாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117க்குட்பட்ட விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை நேரடியாக திறந்து வைக்கிறார். மீதமுள்ள 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இ-சஞ்சீவினி இணைய முகப்பின் மூலமாக மருத்துவர் காணொலி வாயிலாக நோயாளிகளின் மேல்சிகிச்சைக்காக மற்றொரு முதுநிலை மருத்துவரின் ஆலோசனையை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைத்து நலவாழ்வு மையங்களிலும் செயல்படுத்தப்படும்.இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் , ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் , ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை, கோவை, திருச்சி சேலம் என பல இடங்களில் 500 நகர்ப்புற மையங்களை நாளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: