2024 நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெறுவோம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

சென்னை : 2024 நாடாளுமன்ற தேர்தலில், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம் என, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில், தங்க மோதிரங்கள், பழங்கள், உடைகளை ஆகியவற்றை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1ம் தேதியே கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட தொடங்கி விட்டோம். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். குறிப்பாக மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளிய மக்கள் வாழுகின்ற பகுதிகளில் மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ஆதரவற்ற இல்லங்களில் உள்ள பெரியவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை வழங்குவது என பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளோம். செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியுள்ளோம், பூத் கமிட்டி அமைத்துள்ளோம். குதிரை ரெடியாக இருக்கிறது. தேர்தல் ஆறு மாதத்திற்கு முன்பு வந்தாலும், அதற்கு பின்பு வந்தாலும் திமுக கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் வெற்றி பெறும்’’ என தெரிவித்தார். அப்போது, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, தலைமை மருத்துவர் பழனிவேல் உட்பட ஏராளமானோர் இருந்தனர்.

The post 2024 நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெறுவோம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: