திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஊர் திரும்ப போதுமான பஸ்கள் இயக்கக்கோரி பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில், வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் காலை 10.57 மணிக்கு தொடங்கி, நேற்று காலை 9.38 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதியது. இந்நிலையில், பவுர்ணமி கிரிவலத்தின் 2ம் நாளான நேற்றும் அதிகாலையில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதாலும், சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை நாட்களில் பவுர்ணமி கிரிவலம் அமைந்ததாலும் வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்தது. அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலையில் இருந்தே தரிசனத்துக்காக வெளி பிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்யும் நிலை காணப்பட்டது. விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள், நேற்று காலை ஊர் திரும்புவதற்கு போதுமான பஸ் வசதியின்றி தற்காலிக பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர். குறிப்பாக, சென்னை, புதுச்சேரி வழித்தடத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமைத்திருந்த தற்காலிக பஸ் நிலையத்தில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பஸ்சுக்காக காத்திருந்த பக்தர்கள் திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, படிப்படியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு நிலைமை சீரடைந்தது. மேலும், திருவண்ணாமலை ரயில் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அதனால், திருப்பதி மற்றும் விழுப்புரம் சென்ற தினசரி ரயில்களில் நெரிசலான நிலையில் பக்தர்கள் பயணித்தனர். ரயிலில் ஏற முடியாமல் முதியவர்கள், பெண்கள் தவித்தனர்.
The post திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்: போதிய பஸ்கள் இயக்க கோரி மறியல் appeared first on Dinakaran.