தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் வெப்பம் அதிகரிக்கும் சென்னையில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. 15 இடங்களில் 100 டிகிரியாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இருப்பினும், இன்னும் சில நாட்களுக்கு வெயில் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, கேரளாவில் சில இடங்களில் 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குமாறாக அதிகரித்து வருகிறது.

பல்வேறு இடங்களில் நேற்று வெயில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும், சென்னை, கரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதேபோல, கோவை, கடலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக சென்னை விமான நிலையத்தில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இதுதவிர 15 நகரங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது.

சென்னை நுங்கம்பாக்கம் 108 டிகிரி, திருத்தணி 107, வேலூர் 106 டிகிரி, புதுச்சேரி 105 டிகிரி, மதுரை விமான நிலையம் 105 டிகிரி, மதுரை நகரம், கடலூர், நாகப்பட்டினம் 104 டிகிரி, பரமத்தி வேலூர் 103 டிகிரி, சேலம், திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர் 102 டிகிரி, பரங்கிப்பேட்டை, காரைக்கால், பாளையங்கோட்டை 101 டிகிரி வெயில் நிலவியது.இதையடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதில் அதிகபட்சமாக பெருந்துறையில் 50மிமீ மழை பெய்துள்ளது. ஒகேனக்கல் 40மிமீ, பவானி, எடப்பாடி, அம்மாபேட்டை, விருதுநகர், சென்னிமலை 30மிமீ, குமாரபாளையம், இரணியல், பென்னாகரம், தம்மம்பட்டி, ஓமலூர் 20மிமீ, மணப்பாறை, திருப்பூர், பெரம்பலூர், நத்தம் 10மிமீ மழை பெய்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும். இருப்பினும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். ஓரிரு இடங்களில் இயல்பைவிட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட் இருக்கும். மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் வெப்பம் அதிகரிக்கும் சென்னையில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: