டெல்டா மாவட்டங்களில் 80 கோடியில் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு: வருகிற 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு

* 3.63 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு இலக்கு

டெல்டா மாவட்டங்களின் நிலப்பரப்பு நெல் சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. இதனால்தான் இங்கு நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகள் பாசனத்திற்காக முழுவதும் நம்பியிருப்பது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையைத்தான். கர்நாடகத்திலிருந்து வரும் காவிரியின் குறுக்கே தமிழகத்தில் அமைந்துள்ள ஒரே பெரிய அணை மேட்டூர் அணை மட்டுமே. இதைத்தவிர வேறு இடங்களில் அணை கட்டுவதற்கான நில அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. எனவே டெல்டா மாவட்டங்களின் சாகுபடிக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மேட்டூர் அணை மட்டுமே. டெல்டா மாவட்டங்களில் 25 ஆண்டுகளுக்கு முன் வரை முப்போக நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. அதன்பின் கர்நாடக அரசின் பிடிவாதத்தால் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் வராமல் போனதால் முப்போகம், இருபோகமாக மாறிப்போனது.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கர்நாடக அரசுடன் இணக்கம் இல்லாததால் 10 ஆண்டுகளில் 8 ஆண்டு நீர் இல்லாமல் குறுவை சாகுபடி பொய்த்தே போய்விட்டது. இந்நிலையில்தான் விவசாயிகளுக்கு வந்த வசந்த காலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் மேட்டூர் அணை 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி உரிய நேரத்திலும், அதன் பின்னர் கடந்தாண்டு வரலாற்றிலேயே இல்லாத வகையில் மே 24-ம் தேதி முன்கூட்டியேயும் திறக்கப்பட்டது. மேலும் உரிய நேரத்தில் சாகுபடிக்கு தேவையான விதை, உரம், இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன. டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக நடைபெற்று வந்த 97 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடியை தாண்டி கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் 2 ஆண்டாக குறுவை சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தாண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கான 1,07,500 ஏக்கர் என்பதை தாண்டி 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக 1,82,040 ஏக்கர் என இலக்கை மிஞ்சி சாகுபடி நடந்தது. நடப்பாண்டு 1,10,230 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும் இலக்கை மிஞ்சும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 16 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, முன்பட்ட குறுவை சாகுபடியாக 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தடையின்றி தண்ணீர் வந்து சேர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 3லட்சத்து 63ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிலும் வழக்கம் போல் வரும் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதையடுத்து தற்போது குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்று நீர்மூலம் குறுவை விதை நாற்றாங்கால் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. திருச்சி மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் 636 தூர்வாரும் பணிகளை 4,004 கி.மீ தொலைவுக்கு மேற்கொள்ள ரூ.80 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த தூர்வாரும் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் உள்ளதால் கடைமடை வரை எந்தவித தடையுமில்லாமல் தண்ணீர் விரைவில் சென்றடைந்து விடும் என்பதால் விவசாயிகள் உற்சாமடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் இடுபொருட்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

* 25 ஆயிரம் கன அடிக்கு 430 மெகாவாட் மின் உற்பத்தி

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும்போது மின் உற்பத்தியும் தொடங்கும். இங்கு நீர் மின் உற்பத்தி 1987 முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் அணை மின் நிலையம் மூலம் 50 மெகா வாட் மற்றும் சுரங்க மின் நிலையத்தில் 200 மெகா வாட் என 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தவிர காவிரி ஆற்றின் இடையே செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, கல்வடங்கம், பவானி கட்டளை, வெண்டிப்பாளையம் ஆகிய 6 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் உள்ள மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் என180 மெகாவாட் என மொத்தம்430 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அணையிலிருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்போது இந்த அளவு மின் உற்பத்தி செய்யலாம். தண்ணீர் திறப்பு குறைந்தால் மின் உற்பத்தியும் குறையும்.

* டெல்டாவில் 45 ஆயிரம் டன் உரம் இருப்பு

குறுவை சாகுபடி பணிகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் 1200 டன் பொட்டாஷ் உரம் தஞ்சாவூர் வந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 800 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற பொட்டாஷ் உரங்கள் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. யூரியா 11,511 டன்னும், டி.ஏபி 1,828 டன்னும், பொட்டாஷ் 509 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3,052 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை நெல்லையும் 90 சதவீத விவசாயிகள் பெற்றுள்ளனர். 400 டன் விதை நெல் கையிருப்பில் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் யூரியா 3ஆயிரம் டன், டிஏபி, பொட்டாஷ் தலா 1000 டன், காம்ப்ளக்ஸ் 500 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 24,350 டன் உரம் இருப்பு இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 டன் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.14 ஆயிரம் டன் இருப்பு உள்ளது.

* மேட்டூர் அணை கட்டப்பட்டது எப்படி?

டெல்டா மாவட்டங்களின் ஒரே நீராதாரமாக தற்போது இருக்கும் காவிரி ஆறு, அன்றைய கால கட்டங்களில் கர்நாடகத்திலிருந்து மழைக்காலங்களில் வெள்ளமாக பெருக்கெடுத்து தமிழ்நாட்டிற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூரில் அணை கட்டி நீரை தேக்கினால் பாசன நீரை முறையாக பயன்படுத்த முடியும் என்று அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த திவான் சர்.சி.பி.ராமசாமி அய்யரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவர் மைசூர் சமஸ்தானத்தில் இருந்த திவான் பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து தெரிவித்தார். இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்பதாகும். ஆனால் அணை கட்ட மைசூர் சமஸ்தானம் ஒப்புக்கொள்ள மறுத்தது.

இதனால் வெறுத்துப்போன நெற்களஞ்சிய மாவட்ட விவசாயிகள் மழை, வெள்ள காலங்களில் காவிரி ஆற்று நீரால் தமிழகத்தில் ஏற்படும் சேதங்களுக்காக ஆண்டுதோறும் தமிழகத்திற்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று தஞ்சாவூர் கலெக்டர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் அளித்தனர். இந்த இடத்தில் இழப்பீடு வெறும் ரூ.30 லட்சம் மட்டுமா என்ற கேள்வி எழும். அப்போதைய கால கட்டத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.30 மட்டுமே. இதனால் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 1 லட்சம் பவுன் அளிக்க வேண்டுமா? என்று மைசூர் சமஸ்தானம் சிந்தித்தபோது, ஓசைப்படாமல் காய் நகர்த்திய சர்.சி.பி. ராமசாமி அய்யர் பேசாமல் அணை கட்ட அனுமதி கொடுத்து விடலாம் என்று சமஸ்தானத்தை சம்மதிக்க வைத்தார்.இதையடுத்து பல்வேறு திட்ட அறிக்கைகள், தாமதங்களுக்குப்பின் ஒருவழியாக 1901 செப்டம்பர் 2-ம் தேதி திட்டம் முழு வடிவம் பெற்றது. இந்த திட்டம் குறித்த வேலைகள் நடப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கரிகால சோழன் கல்லணையை கட்டியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 1925 ஜூலை 20-ம் தேதி முதன் முதலாக வெடி வைத்து பணிகள் தொடங்கியது. அதன்பின் அணை கட்டி முடிக்கப்பட்டு 1934 ஆகஸ்ட் 21-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதற்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டது. மேட்டூர் அணையின் அதிக பட்ச உயரம் 124 அடி. இதில் 120 அடி உயரம் வரை நீர் தேக்க முடியும். அணையில் 59.25 சதுர மைல் பரப்பளவில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது.

* குதிர்கள், பத்தாயங்கள்

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகளின் வீடுகளில் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்டா மாவட்டங்களில் 80 கோடியில் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு: வருகிற 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: