வீடு புகுந்து சப் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறிப்பு: டிரோன் மூலம் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஈசிஆர் சாலையில் வசிப்பவர் கண்ணன். இவர் மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று கண்ணன் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இவரது மனைவி சங்கீதா மற்றும் மகள் சிந்து ஆகிய இருவரும் மாடிவீட்டின் போர்டிகோவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பைக்கில் 2 மர்ம நபர்கள் வந்தனர். வீட்டு வாசலில் இருந்த நாயை தாக்கி விட்டு உள்ளே புகுந்த இருவரும் கத்தியை காட்டி சங்கீதா கழுத்தில் கிடந்த சுமார் 8 பவுன் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
தகவலறிந்த எடையூர் மற்றும் முத்துப்பேட்டை போலீசார் சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி சென்றனர்.

மர்ம நபர்கள் இருவரும் ஜாம்புவானோடை வந்து அலையாத்திக்காடு செல்லும் சாலையில் சென்றனர். தொடர்ந்து போலீசார் விரட்டி வந்ததால் அப்பகுதியில் இருந்த இறால் பண்ணை குளத்தில் பைக்கை போட்டு விட்டு அங்கிருந்து வாய்க்காலில் குதித்து பின்னர் கோரையாற்றில் நீந்தி சென்று அலையாத்திகாட்டுக்குள் புகுந்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையங்களில் இருந்து வந்த ஏராளமான போலீசார் அலையாத்திகாட்டுக்கு படகு மூலம் சென்று தேடினர்.

பின்னர் டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு மாலை வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு ஆன நிலையில் அலையாத்திகாடு எல்லையில் உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு எம்கே நகர் அருகே செல்லும் பாமணி ஆற்றில் கொள்ளையர்கள் இருவரும் நீந்தி வருவதை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் தேனியை சேர்ந்த வில்லியம் மகன் தர்மதுரை(20), முத்து மகன் நல்லவன் (எ) நல்ல தம்பி (27) என்று தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடு புகுந்து சப் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறிப்பு: டிரோன் மூலம் 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் appeared first on Dinakaran.

Related Stories: