சென்னை- பெங்களூரூ சாலையில் விபத்து: தாய், 3 குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி

காஞ்சிபுரம்: சென்னை, பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில், தாய், 3 குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா சே.நாச்சியார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம் (40). இவரது மனைவி ரத்னா. இவர்களுக்கு ராஜலட்சுமி (5), தேஜா (இரண்டரை வயது) என்ற மகளும் 3 மாத ஆண் குழந்தையும் இருந்தது.

சென்னையில் வசித்துவரும் தனது மாமியார் வீட்டுக்கு ராமஜெயம் தனது குடும்பம் மற்றும் உறவினர் ராஜேஷ் (29) என்பவருடன் நேற்று முன்தினம் வந்திருந்தார். பின்னர் இங்கிருந்து நேற்றிரவு அனைவரும் காரில் ஊருக்கு கிளம்பினர். சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியில் வந்தனர். அப்போது திடீரென காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு லோடு ஏற்றிய லாரி மீது படுவேகமாக மோதியது.

இந்த விபத்தில் ரத்னா, 2 குழந்தைகள் மற்றும் அவரது உறவினர் ராஜேஷ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். 3 மாத ஆண் குழந்தையும் ராமஜெயமும் காரில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனிடையே விபத்தை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டுவந்து, காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலுச்செட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் ராமஜெயம் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து 5 பேரின் சடலங்களை போலீசார் மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சென்னை- பெங்களூரூ சாலையில் விபத்து: தாய், 3 குழந்தை உட்பட 5 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: