ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் இழப்பு; சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை

நித்திரவிளை: ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் பணத்தை இழந்ததால் சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்தவர் தேவதாசன்(40). கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி சினிமா கேமராமேனாக பணியாற்றி வந்தார். ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து, கடன் ஏற்பட்டதால், நிலத்தை விற்று கடனை அடைத்துள்ளார். அதன்பிறகு மனைவி ஊரான பூத்துறை கோயில் வளாகத்தில் வந்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டன்துறைக்கு சென்றவர் பெற்றோரிடம் பணத்தையும், சொத்தையும் இழந்தது குறித்து கூறி அழுதுள்ளார். இரவு 11.15 மணியளவில் வீட்டு மாடிக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டார். சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் தேவதாசன் கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் கதவை உடைத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், தேவதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மாணவி தற்கொலை; வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பத்தை சேர்ந்தவர் பிரபு(43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவர்களது மகள் விஷ்ணுபிரியா(16), 10ம் வகுப்பு படித்து வந்தார். பிரபுவுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது விஷ்ணுபிரியாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், ‘எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தவும். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டால் என் ஆன்மா சாந்தி அடையும்’ என எழுதப்பட்டிருந்தது.

The post ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் இழப்பு; சினிமா கேமராமேன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: