இப்படி ஒரு பயங்கரத்தை இதுவரை சந்தித்ததே இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் இருந்து தப்பிய பயணி கண்ணீர் பேட்டி

சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்த விமானத்தில், ரயில் விபத்தில் தப்பிய பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ராஜலட்சுமி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். அவர்களை விமான நிலையத்தில் உறவினர்களும், குடும்பத்தினரும் கண்ணீர் மல்க வரவேற்றனர். கல்லூரி மாணவி ராஜலட்சுமி, இன்டர்யூவுக்காக கொல்கத்தா சென்று விட்டு திரும்பியபோது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் கூறுகையில், ‘‘கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தேன். நான் பி 8 கோச்சில் இருந்தேன். இரவு 7 மணி அளவில் திடீரென எங்களுடைய கோச் பயங்கரமாக ஆடியது. இதனால் எங்கள் கோச்சில் இருந்த பலர் ரயில் பெட்டிக்குள் கீழே விழுந்தனர்.

அப்போது கருகிய வாடை ஏற்பட்டது; ரயிலும் நின்று விட்டது. உடனே நாங்கள் பதற்றத்துடன் கீழே இறங்கி சென்று பார்த்தபோது, நாங்கள் இருந்த கோச் தப்பி இருந்தது. ஆனால் எங்கள் கோச்சுக்கு பின்னால் உள்ள சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கோச்சுகள் சாய்ந்து நொறுங்கி கிடந்தன. அதற்குள் இருந்தவர்கள் மரண ஓலம் எழுப்பினர். ஆங்காங்கே கை கால்கள் இழந்து உடல்கள் கிடந்தன. நானும் என்னோடு வந்த சிலரும் சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கு தவித்தோம். பின்பு எப்படியோ கஷ்டப்பட்டு, புவனேஸ்வர் விமான நிலையம் வந்து, தற்போது சென்னை வந்து சேர்ந்திருக்கிறோம். நாங்கள் வந்த ரயிலில் முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகளில் வந்த பலர் உயிரிழந்தனர்’’ என்றார்.

ரமேஷ் கூறுகையில், ‘‘நான் குடும்பத்துடன் ஜார்கண்டில் பணியாற்றி வருகிறேன். குழந்தையை சொந்த ஊரில் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, குடும்பத்தினரை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சொந்த ஊருக்கு அனுப்பினேன். நான் நேற்று முன்தினம் மாலை கொல்கத்தாவில் இருந்து இந்த ரயிலில் புறப்பட்டு வந்தேன். இரவு 7 மணி அளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. தெய்வத்தின் அருளால், நான் இருந்த ஏ 2 கோச் விபத்திலிருந்து தப்பியது. கீழே இறங்கிப் பார்த்த போது, எங்கும் சடலங்கள் சிதறி கிடந்தன. கை கால்களை இழந்து உடல்கள் துடித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்திலும் நான் கிராம மக்களோடு சேர்ந்து ஓரளவு மீட்புப் பணியில் ஈடுபட்டேன். பலருக்கு விமானத்தில் செல்ல வசதி இல்லை. எனவே சிலர் அங்கிருந்து பஸ்களில் விசாகப்பட்டினம் சென்று, விசாகப்பட்டினத்தில் இருந்து வேறு பஸ்ஸில், தமிழ்நாட்டுக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்றனர்.

நாங்கள் உயிர்தப்பி விமானத்தில் சென்னை வந்திருக்கிறோம். விபத்து நடந்த சிறிது நேரத்தில், எங்களுடைய செல்போன்களுக்கு, தமிழ்நாடு அரசு அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் தொடர்பு கொண்டு, எங்களுடைய நலனை விசாரித்து உதவி ஏதாவது தேவையா என்று அக்கறையுடன் கேட்டனர். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த செலவில் சென்று விடுகிறோம் என்று கூறிவிட்டு வந்திருக்கிறோம். வாழ்நாளில் இதைப் போன்ற மிகப்பெரிய ஒரு பயங்கரத்தை இதுவரை சந்தித்ததே இல்லை. எங்கள் கண்ணெதிரே எங்களோடு பயணித்த 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் உடல் உறுப்புகளை இழந்து படுகாயங்களுடன் தவித்தனர்’’ என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

The post இப்படி ஒரு பயங்கரத்தை இதுவரை சந்தித்ததே இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் இருந்து தப்பிய பயணி கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: