சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான தனி வழியை அமல்படுத்த கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை சாலைகளில், லேன் (தனி வழி) ஒழுங்குமுறைகளை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகளில் கனரக வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக தனித்தனி லேன்கள் எனப்படும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த லேன் ஒழுங்குமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கூறி சென்னையைச் சேர்ந்த குமாரதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சென்னை மாநகரம், உலகளவில் அதிக எண்ணிக்கையில் இரு சக்கர வாகனம் இயக்கப்படும் நகரமாக உள்ளது. சென்னை சாலைகளில், லேன் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஒதுக்கப்பட்ட வழியில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. இதுசம்பந்தமாக அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, சென்னை சாலைகளில் லேன் ஒழுங்குமுறையை அமல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 22ம் தேதி தள்ளிவைத்தனர்.

The post சென்னை சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கான தனி வழியை அமல்படுத்த கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: