முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டினர் பற்றிய விவரங்களையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்தும் ரயில்வே உயர் அலுவலர்களுடன் கேட்டறிந்தார். பின்னர், எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக ஒடிசா மாநில தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கும் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. விபத்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு மாநில கட்டுப்பாட்டு செல்போன் எண் – 94458 69843, தொலைபேசி எண் – 1070, வாட்ஸ்அப் எண் – 9445869848 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்திருக்கிறோம். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* அவசர எண்கள் அறிவிப்பு
விபத்து குறித்து தகவல் அறிய, சிறப்பு மீட்பு படை அலுவலகத்தின் அவசர எண் வழங்கப்பட்டுள்ளது. 6782262286 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் விவரம் அறிய 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், விவரங்கள் அறிய 1070 என்ற இலவச எண்ணிலும், 94458 69843, 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 044 2859 3990 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447701, 044-28447703 எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* புலம்பெயர் தொழிலாளர்கள்
கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களில் பலர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னை மெட்ரோ பணிக்காக பலர் மேற்குவங்கத்தில் இருந்து இந்த ரயில் மூலமாக சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஏராளமானோர் எஸ்-7 பெட்டியில் பயணம் செய்துள்ளனர் என்று அந்த பெட்டியில் பயணம் செய்து உயிர் தப்பிய மெட்ரோ ரயில் தொழிலாளி சுகந்த் ஹல்டர் இதை தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: