2009ம் ஆண்டு இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானார்கள். 2011ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் ரயில் பஸ் மீது மோதியதில் 69 பேர், 2012ல் டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்ததில் 30பேர், 2014ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கோரக்ராம் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயிலில் மோதியதில் 25 பேர், 2015ம் ஆண்டு டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 30 பேர், 2016ம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டதில் 150 பேர், 2017ம் ஆண்டு ஹரித்துவார் மற்றும் பூரி இடையே ஓடும் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேர், 2022ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் அலிபுர்துவாரில் பிகானோர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 9பேர் என்று நாம் பலிகொடுத்த உயிர்கள் ஏராளம். இவை அனைத்திற்கும் உச்சமாக 294 உயிர்களை இப்போது இழந்திருக்கிறோம்.
இதுபோன்று தொடரும் அபாயங்களை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத இத்துறையின் அலட்சியமும் மிகமுக்கிய காரணம். தொழில்நுட்ப வளர்ச்சிகள் வியப்பூட்டிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதுசார்ந்த துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் போதிய அளவில் இல்லை என்பதும், அல்லது அவை துரிதகதியில் நடக்கவில்லை என்பதையும் இங்கே திரையிட்டு மூடமுடியாது. இது ஒருபுறமிருக்க ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் விஐபி பிரிவின் கீழ் வருகின்றன. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலும், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் ஒரே சிக்னல் சிஸ்டத்தை பயன்படுத்தியே இயக்கப்படுகிறது.
ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் விஐபி பிரிவில் இருப்பதால் அந்த ரயில்கள் செல்வதற்கு முன்பு, தண்டவாளங்களை பணியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்கின்றனர். மேலும் அந்த ரயில்களில் எல்எச்பி என்ற நவீன பாதுகாப்பு கட்டமைப்புகள் கொண்ட ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரயில் பெட்டிகளின் கட்டுமானம் மிகவும் வலுவானது. இவை தடம் புரண்டாலும், தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு பயணிகளை காக்கும் தன்மை கொண்டது. எனவே எளிய மக்கள் பயணிக்கும் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த கவனம் இருந்திருக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் எல்எச்பி பாதுகாப்பு என்பது ஆண்டுக்கணக்கில் அறிவிப்பாக மட்டுமே உலா வருகிறது. இதற்கிடையில் ரயில் விபத்தை தடுப்பதற்கான ‘கவச்’ தொழில்நுட்பத்தின் நிலையும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இங்கே விஐபி என்ற சொல்லை விட உயிர் என்ற சொல் வலிமை வாய்ந்தது. அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இனிமேலாவது ரயில்களின் இயக்கம் இருக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த இதயங்களின் வேண்டுகோள்.
The post அலட்சியம் தந்த பேராபத்து appeared first on Dinakaran.