ஜூன் 15ம் தேதி முதல் போடி-மதுரை-சென்னை ரயில் சேவை தொடக்கம்: தேனி மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை: வரும் 15ம் தேதி முதல் போடியில் இருந்து சென்னை வரை ரயில் இயக்கப்பட உள்ளது. அதே நாளில் மதுரையிலிருந்து போடிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் மீட்டர் கேஜ் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வரை என படிப்படியாக சோதனை ஓட்டம் நடத்தி இறுதியில் போடி வரை முடிக்கப்பட்டது. சென்னையிலிருந்து மதுரை வந்து அங்கிருந்து போடி வரை ரயிலை இயக்க வேண்டும் என தென்மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று போடி-சென்னை, சென்னை-போடிக்கு ரயில் சேவை வரும் 15ம் தேதி முதல் துவங்க உள்ளது. அதே நாளில் மதுரை-போடிக்கும் தினசரி ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.

போடி-சென்னை ரயில் இரவு 8.30 மணிக்கு போடியில் இருந்து கிளம்புகிறது. மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயங்கும். தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.

சென்னை-போடி ரயில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையிலிருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்புகிறது. போடிக்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும். அதே நாளில், மதுரை – தேனி வரை இயக்கப்பட்டு வந்த தினசரி ரயிலானது காலை 8.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு காலை 10:30 மணிக்கு போடியை சென்றடையும். மறு மார்க்கமாக தினமும் மாலை 5.50 மணிக்கு போடியிலிருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை சென்றடையும். இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post ஜூன் 15ம் தேதி முதல் போடி-மதுரை-சென்னை ரயில் சேவை தொடக்கம்: தேனி மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: