போளூரில் வேளாண் அதிகாரி தகவல்: திரவ உயிர் உரங்களில் மகசூல் அதிகரிப்பு

போளூர்: போளூர் அடுத்த வசூரில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகளை வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குனர் அசோக்குமார், உதவி இயக்குனர் சபிதா மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: போளூர் வசூரில் உள்ள திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 55 ஆயிரம் லிட்டர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 6 வகையான உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ₹300 வீதம் ஆண்டுக்கு ₹1 கோடியே 65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை உயிர் உரங்கள் நைட்ரஜன், கரையும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.

உயிர் உரங்கள் ஒரு வருடம் வரை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழப்பயிர்கள் மற்றும் மர பயிர்களுக்கும் உயிர் உரங்கள் சொட்டு நீர் மூலமும் எளிதாக வழங்கலாம். உயிர் உரங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் எளிதாக கிடைக்கிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாய மகசூலை அதிகளவில் உற்பத்தி செய்து தங்களை வாழ்வாதாரத்தை பெருக்கி பயன்பெறவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post போளூரில் வேளாண் அதிகாரி தகவல்: திரவ உயிர் உரங்களில் மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: