ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில் மாற்றுப்பாதையில் வருகிறது: திருவனந்தபுரம்-சாலிமர் ரயில் ரத்து

சேலம்: ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில்கள் மாற்றுப்பாதை வழியாக வருகிறது. இதனால், அந்த ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் விபத்தில் சிக்கியதால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த பஹனகாபஜார் பகுதியில் மீட்பு பணி நடந்து வருகிறது. இதனால், கோராக்பூர்-பத்ரக் ரயில்வே மார்க்கத்தின் வழியே இயங்கும் ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. சில ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இந்தவகையில், வட மாநிலங்களில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே கேரளா மாநிலம் செல்லும் 3 ரயில்கள், ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், அந்த ரயில்கள் தமிழகத்திற்கு வந்து சேர தாமதமாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), மாற்றுப்பாதையாக அட்ரா-சாண்டில்-ரூர்கேலா-விசாகப்பட்டணம் வழியே வருகிறது.

இதேபோல், சில்சார்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12508) கோராக்பூர்-டாடா-ரூர்கேலா-சாம்பல்பூர்-சிங்கப்பூர் ரோடு வழியே மாற்றுப்பாதையில் வருகிறது. திப்ரூக்கர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504) கோராக்பூர்-டாடா-ரூர்கேலா-சாம்பல்பூர் வழியே மாற்றுப்பாதையில் வருகிறது. சேலம் வழியே செல்லும் திருவனந்தபுரம்-சாலிமர் எக்ஸ்பிரஸ் (22641), இன்று (3ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில் மாற்றுப்பாதையில் வருகிறது: திருவனந்தபுரம்-சாலிமர் ரயில் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: