தி.மலையில் வைகாசி பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: சிறப்பு, அமர்வு தரிசனம் ரத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமியொட்டி இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி சிறப்பு மற்றும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளிய பெருமைக்குரிய திருவண்ணாமலையில் உள்ள மலையே மகேசனின் திருவடிவாகும். எனவே, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையை வலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி இன்று காலை 10.49மணிக்கு தொடங்கி நாளை (4ம் தேதி) காலை 9.31 வரை நீடிக்கிறது. இந்த நேரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்தது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வைகாசி மாத பவுர்ணமியொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோபூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ெதாடர்ந்து இன்று காலையே பவுர்ணமி தொடங்குவதால் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் பவுர்ணமி வருவதால் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளிபிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பவுர்ணமியொட்டி சிறப்பு மற்றும் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனம் மற்றும் கண்டன தரிசன வரிசையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, விழுப்புரம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ஒட்டி கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை 4 நாட்கள் தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது. இதன்படி பவுர்ணமி தினமான இன்று அதிகாலை முதல் மதுரை, கோவை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை கேட் முன்பு குவிய தொடங்கினர். இதனை தொடர்ந்து சுமார் 6.30 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் மலைப்பாதை வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சென்றனர். சென்னையிலிருந்து வந்த 11 பக்தர்கள் சங்கு ஊதிக் கொண்டே சாமி தரிசனத்துக்கு சென்றனர். மேலும், திருநங்கைகளும் சாமி தரிசனத்துக்கு சென்றனர்.

21 வகையான அபிஷேகம்: வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி ஆகியோருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

The post தி.மலையில் வைகாசி பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: சிறப்பு, அமர்வு தரிசனம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: