ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி : ஜி.கே.வாசன்!!

சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் சுமார் 233 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும்.நேற்று இரவு ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில் சுமார் 233 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதிர்ச்சியானது நாடு முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படுகாயமடைந்த 900 க்கும் மேற்பட்டோருக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய தொடர் நடவடிக்கை தேவை.அதாவது கோரமண்டல் அதிவிரைவு ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதிக்கொண்டதால் பயங்கர விபத்து ஏற்பட்டது,இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு கூடுதலாக நிதியுதவித் தொகை வழங்க வேண்டும்.மீட்புப் பணிகள் வேகமாக, துரிதமாக நடைபெறவும் ரயில்வேத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக மத்திய அரசு 3 ரயில்களின் விபத்துக்கான காரணத்தை உயர்மட்ட விசாரணைக் குழுவின் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும் ரயில் போக்குவரத்தில் கவனக்குறைவு இருக்கவேகூடாது என்பதை ரயில்வேத்துறை கவனத்தில் கொண்டு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ரயில் பாதைகளில் 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கைள் அவசியம் தேவை.ரயில்வேத்துறை இந்த விபத்து நடைபெற்றதற்கு எக்காரணம் கூறினாலும் ஏற்பட்ட உயிரிழப்பு பேரிழப்பாகும். எனவே ரயில் போக்குவரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காத வகையில் கடினமான விதிகளை கடைபிடித்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ரயிலை சுத்தமாக வைத்து, ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்க மத்திய ரயில்வேத்துறை 24 மணி நேர சேவைப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.மத்திய அரசு, ரயில் விபத்துகள் நடைபெறாமல் இருக்கவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொள்ளவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி : ஜி.கே.வாசன்!! appeared first on Dinakaran.

Related Stories: