கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி சுய உதவிக்குழு தினமாக கடைப்பிடிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சுய உதவிக்குழு தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: மகளிரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 1989ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல் முறையாக சுய உதவிக் குழுவைத் தொடங்கினர். இதுவே 1997ம் ஆண்டு மாநில திட்டமாக மகளிர் திட்டம் என்ற பெயரில் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது. தற்பொழுது ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் 4.48 லட்சம் சுய உதவிக் குழுக்களில் உள்ள 50.80 லட்சம் உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் திட்டத்தின் உறுப்பினர்கள் என தங்களை அடையாளப்படுத்துவதில் பெருமை அடைகிறார்கள்.

மேலும், ‘மதி’ என்பது சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் அடையாளமாக மாநில அளவில் உள்ளது. 2023ம் ஆண்டுடன் மகளிர் திட்டம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை நினைவு கூறும் வகையில் சுய உதவிக் குழு தினத்தை கடைபிடிக்க ஆணை வழங்குமாறு அரசிடம் கோரப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்தது. ஆய்வுக்குப்பின், தமிழ்நாட்டில் முதன் முதலாக சுய உதவிக் குழுவைத் தொடங்கி வித்திட்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் 3ம் நாளினை ஒவ்வோர் ஆண்டும் சுய உதவிக் குழுக்களின் மேம்பாடு குறித்த அறிவிப்புடன் சுயஉதவிக் குழு தினமாக கடைபிடிப்பதற்கு அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி சுய உதவிக்குழு தினமாக கடைப்பிடிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: