100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு முதல்வர் மரியாதை

* தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஏழை, எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிக்கு ஏற்பாடு
* மாலையில் புளியந்தோப்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

சென்னை: கலைஞரின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். கலைஞரின் 100வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் ஆகும். இதனால், நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞரின் பிறந்தநாளான இன்று காலை 8 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் கலைஞரின் இல்லத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்துகிறார். காலை 8.50 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி அணியளவில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். காலை 9.20 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். காலை 10 மணிக்கு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசுகிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி, ஊர்கள் தோறும் திமுக எனும் தலைப்பில், கிளைக் கழகங்களில் அமைந்துள்ள திமுக பழைய கொடிக் கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்டங்கள் தோறும் எங்கெங்கும் கலைஞர் என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு கழகமே குடும்பம் எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் சிலைக்கு முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: