மேற்குவங்கத்திலிருந்து வருகிறது வண்டலூர் பூங்காவிற்கு ஒரு ஜோடி வரிக் குதிரை: அதிகாரிகள் தகவல்

சென்னை: மேற்குவங்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி வரிக் குதிரை விரைவில் கொண்டுவரப்படுகிறது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், மேற்குவங்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி வரிக்குதிரை விரைவில் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கர்நாடகாவிலிருந்து ஏற்கனவே, ஏப்ரல் 21ம் தேதி சிங்கம் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு பதில், வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு புலி கர்நாடக உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள சிங்கத்தை சிசிடிவி கேமரா மூலம் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், மற்ற சிங்கங்களுடன் பழகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிங்கத்தை பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில், சிங்கங்களின் உலாவிட கூண்டில் இருந்து விரைவில் திறந்து விடப்படும். கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் மூடப்பட்ட லயன் சபாரி விரைவில் திறக்கப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வந்த 18 வயது கொண்ட டீனா என்ற வரிக்குதிரை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. இந்நிலையில், அந்த குதிரை கடந்த ஆண்டு மே மாதம் உடல்நல குறைவால் இறந்துவிட்டது. இதனால் வரிக்குதிரை உலாவிடம் வெறிச்சோடி காணப்பட்டது. தினந்தோறும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் வரிக்குதிரை இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது கோடைகால விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.

பார்வையாளர்களின் வசதிக்காக மேற்குவங்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி வரிக்குதிரை விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட உள்ள ஒரு ஜோடி வரிக்குதிரையை தனி இடத்தில் வைத்து மருத்துவர்களின் கண்காணிப்பு மூலம் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட உள்ளது. பின்னர், பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக வெளியில் விரைவில் திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மேற்குவங்கத்திலிருந்து வருகிறது வண்டலூர் பூங்காவிற்கு ஒரு ஜோடி வரிக் குதிரை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: