தி.நகர் பிரபல நகைக்கடையில் 2.46 கிலோ தங்கம் திருடியதாக முன்னாள் ஊழியர் மீது புகார்: 50 சவரன் கையாடலில் கைதானவர்

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 2.46 கிலோ தங்க நகைகளை திருடியதாக முன்னாள் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 50 சவரன் கையாடல் செய்ததாக கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் மேலாளர் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த மார்ச் மாதம் எங்கள் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபீர் ஷேக் மற்றும் பாலமுருகன் ஆகியோர் 50 சவரன் நகைகளை கையாடல் செய்ததாக தவறாக புகார் அளித்துவிட்டோம்.

புகாரின்படி பிரபீர் ஷேக் மற்றும் பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு கடையில் உள்ள நகைகளை கணக்கு எடுத்த போது, திருடப்பட்டது 50 சவரன் நகைகள் இல்லை. மொத்தம் 2.46 கிலோ என தெரியவந்தது. எனவே திருடப்பட்ட 2.46 கிலோ நகைகளை பிரபீர் ஷேக் தான் கையாடல் செய்துள்ளார். எனவே அவரிடம் இருந்து மொத்த நகைகளையும் மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் ஊழியர் பிரபீர் ஷேக் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் பிரபல நகைக்கடையில் திருட்டப்பட்ட நகைகள் எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தி.நகர் பிரபல நகைக்கடையில் 2.46 கிலோ தங்கம் திருடியதாக முன்னாள் ஊழியர் மீது புகார்: 50 சவரன் கையாடலில் கைதானவர் appeared first on Dinakaran.

Related Stories: