மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பாஜ எம்பி மீது எப்.ஐ.ஆரில் பயங்கர குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், 10 ஆண்டுகளாக வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தந்ததாகவும், தகாத தொடுதல்களில் ஈடுபட்டதாகவும் போலீஸ் எப்ஐஆரில் அதிர்ச்சிகரமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மைனர் வீராங்கனை உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இதுதொடர்பாக டெல்லி கன்னாட்பிளேஸ் போலீசார் கடந்த ஏப்ரல் 28ம் தேதி பாலியல் துன்புறுத்தல் (354ஏ) பின்தொடர்தல் (354டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் உட்பட 2 எப்ஆர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிஜ் பூஷணை உடனடியாக கைது செய்யக் கோரி, ஒலிம்பிக் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எப்ஐஆர் தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. இதில், மூச்சு பரிசோதனை செய்வதாக வீராங்கனைகளின் ஆடைகளை கழற்றி அந்தரங்க உறுப்புகளை பிரிஜ் பூஷண் தொட்டதாகவும், வெளியூர் போட்டிகளின் போது ஓட்டல் அறைக்கு தனியாக வருமாறும், பாலியல் ரீதியாக ஒத்துழைத்தால் விளையாட்டில் சலுகை தருவதாகவும், ஊட்டச்சத்து பொருட்களை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும் வீராங்கனைகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பதக்கம் வழங்கும் விழா உட்பட பல்வேறு சமயங்களில் வீராங்கனைகளை பிரிஜ் பூஷண் தகாத முறையில் தொடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக வீராங்கனைகள் கூறியதாக எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் இந்த கொடுமை 10 ஆண்டாக தொடர்வதாகவும் அவர்கள் 15 குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் எப்ஐஆர் தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

* பிரதமரிடம் கூறியும் பிரயோஜனமில்லை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில், ‘’25 சர்வதேச பதக்கங்களை வென்ற இந்திய மகள்கள், நீதிக்காக தெருவில் மன்றாடுகிறார்கள். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 15 குற்றச்சாட்டுகளுக்கு ஆளான எம்பியோ பிரதமரின் பாதுகாப்பு கேடயத்தின் கீழ் மிக பத்திரமாக இருக்கிறார்’ என கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா தனது டிவிட்டரில், வீராங்கனையின் குற்றச்சாட்டு குறித்த எப்ஐஆர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த வீராங்கனை, பிரிஜ் பூஷண் பற்றி பிரதமர் மோடியிடம் நேரடியாக புகார் செய்ததாகவும், இதுதொடர்பாக ஒன்றிய விளையாட்டு அமைச்சரிடம் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததாகவும் கூறி உள்ளார். ஆனால் 2 ஆண்டாகியும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து மொய்த்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

The post மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பாஜ எம்பி மீது எப்.ஐ.ஆரில் பயங்கர குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: