சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை… இனி குழந்தைகளுக்கும் சாத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தை சிறுநீரகவியல் மூத்த மருத்துவர் என்.பிரஹலாத்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை. சமீபத்தில், வெவ்வேறு ரத்தப்பிரிவுகளைக் கொண்ட குழந்தை மற்றும் தாயின் மூலம் முதன்முறையாக குழந்தைகளுக்கான ABO Incompatible சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இது குறித்து குழந்தை சிறுநீரகவியல் மூத்த மருத்துவர் என்.பிரஹலாத் கூறியதாவது:

தீராத சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த 16 வயது சிறுமிக்கு, முதல்முறையாக, ABO இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். இது அத்தனை சுலபமல்ல, குழந்தை மற்றும் தாயின் ரத்தம் வெவ்வேறு க்ரூப் என்பதால் சிறுநீரகம் பொருந்தாமல் போக நிறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படாமல் இருக்க பலவிதமான சோதனைகள் செய்து, புதிய தொழில் நுட்பங்களை கொண்டு நவீன சிகிச்சை முறைகளை பின்பற்றி, அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன், தாயின் சிறுநீரகம் லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. மூன்று மணி நேரத்தில் முழு அறுவைசிகிச்சையும் முடிந்து, குழந்தை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி நலமுடன் இருக்கிறார்.

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என்பது என்ன..

ஒவ்வொருவருக்கும் பிறக்கும்போதே இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஏதாவது காரணத்தால், அந்த சிறுநீரகங்கள் பழுதடைந்துவிட்டால், அது வேலை செய்யாமல் போய்விடும். இதனால், உடலில் உள்ள அமிலம், தண்ணீர், அழுக்குகள் வெளியேற முடியாமல், உடலிலேயே தங்கிவிடும். இது வெளியேறாமல் தங்கிவிட்டால், ஒரு கட்டத்தில் மற்ற உறுப்புகளையும் பாதித்து உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்த கட்டத்தில்தான் ஒருவருக்கு டயாலிஸஸ் தேவைப்படும். அதாவது, செயற்கையாக உடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுவது.

இந்த டயாலிஸஸ் என்பது மிஷின் மூலம் செய்வது. இது உடலில் உள்ள ரத்தத்தை வெளியே எடுத்து அதில் தேங்கியுள்ள நச்சு பொருள்களை அகற்றிவிட்டு, மீண்டும் நல்ல ரத்தத்தை உடலில் செலுத்த வேண்டும். இதை வாரத்தில் மூன்று நாள்களாவது செய்ய வேண்டும். ஏனென்றால் சிறுநீரகங்களை பொருத்தவரை, ஒவ்வொரு விநாடியும் வேலை செய்து கொண்டே இருக்கும். அது ஆரோக்கியமாக இருக்கும்போது பிரச்னையில்லை.

ஆரோக்கியமற்று இருக்கும் போது, ஒவ்வொரு விநாடியும் உருவாகும் கழிவுகள் தேங்கிக்கொண்டே இருக்கும். அதனால், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை டயாலிஸஸ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அது எல்லாருக்கும் சாத்தியமில்லை. எனவே, அறுவைசிகிச்சை மூலம் கெட்டுப்போன சிறுநீரகங்களை அகற்றிவிட்டு, வேறு சிறுநீரகத்தைப் பொருத்துவதுதான் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை எனப்படுகிறது.

சிறுநீரகங்களை யார் யாருக்கு தானமாக வழங்கலாம்..

சிறுநீரக மாற்று அவரது தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா என ரத்த சொந்தங்கள் மட்டுமே வழங்க முடியும். ஏனென்றால், பெறுபவரின் ஜீனுக்கும் அளிப்பவரின் ஜீனுக்கும் தொடர்பு இருக்கும். எனவே, அவர்களின் சிறுநீரகங்களை பெறுபவரின் உடல் சுலபமாக ஏற்றுக் கொள்ளும். ஆனால், பெரியவர்களுக்கு மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கும், குழந்தைகளுக்கு மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கும் ஒருசில வேறுபாடு இருக்கும். அது அந்த குழந்தையின் வயதைப் பொருத்தே அமையும்.

உதாரணமாக, பத்து வயதுக்கும் கீழ் உள்ள குழந்தை என்றால், அதன் அம்மாவோ, அப்பாவோ அந்த குழந்தைக்கு மாற்று சிறுநீரகம் தரலாம். ஆனால், அந்த சிறுநீரகத்தை பொருத்துமளவுக்கு குழந்தையின் வயிற்றில் இடம் இருக்க வேண்டும். ஏனென்றால், முழுவதும் வளர்ச்சியடைந்த ஒருவருக்கும் வளரும் குழந்தைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது அல்லவா. எனவே, அந்த சிறுநீரகம் தங்குமளவு குழந்தையின் வயிற்றில் இடம் வேண்டும்.

அதனை தாங்குமளவு உடல் எடையும் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் பொருந்தி வந்து சிறுநீரக மாற்று செய்தபின்பு, அந்த சிறுநீரகங்கள், குறைந்தபட்சம் 7-8 ஆண்டுகள் வரை நன்றாக வேலை செய்யும். ஒருசிலருக்கு 25 ஆண்டுகள் வரை கூட நன்றாக வேலை செய்து வருகிறது. ஆனால், எப்போது அதன் ஆயுட்காலம் முடியும் என்பது கணக்கிட முடியாது. அப்படி முடியும் பட்சத்தில், மீண்டும் வேறு ஒருவரின் சிறுநீரகத்தை பொருத்த வேண்டி வரலாம்.யாரெல்லாம் தானம் கொடுக்கலாம் என்றால், ரத்த சொந்தமாக இருக்க வேண்டும்.

தானம் கொடுப்பவர் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சமீபகாலமாக, தானம் பெறுபவரின் தாய், தந்தையின் சிறுநீரகத்தைவிட, அவர்களது தாத்தா, பாட்டியின் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், அது பொருந்துமா என்றுதான் பார்க்கிறோம். ஏனென்றால், 75 வயதில் இருக்கும் ஒரு முதியவர், ஒரு சிறுநீரகத்தை வைத்துகொண்டு மேலும், 25 ஆண்டுகள் வரை வாழமுடியும். அதுவே, தாய், தந்தையாக இருந்தால், அவர்களது வாழும் காலம் இன்னும் கூடுதலாக இருக்கும். எனவே, தாத்தா, பாட்டியின் சிறுநீரகம் பொருந்தினால் அதையே தேர்வு செய்கிறோம்.

பெரியவர்களின் சிறுநீரகம் குழந்தைக்கு பொருந்துமா..

சிறுநீரகத்தைப் பொருத்தவரை பெரியவர்களின் சிறுநீரகம் குழந்தைக்கும் பொருந்தும். பொதுவாக, சிறுநீரகம், முதுகுத் தண்டிற்கு இருபுறமும் இருக்கும். ஆனால், மாற்று சிறுநீரகம் தொப்புளுக்கு கீழ்பகுதியில் வலதுபுறம் பொருத்தப்படும். அதற்கு அந்த குழந்தைக்கு சிறுநீரகம் பொருத்தியபின்பும் 10 செ.மீ அளவுவரை வயிற்றில் இடம் இருக்க வேண்டும். குழந்தையின் எடை குறைந்தபட்சம் பதிமூன்று கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். இவை இருந்தாலே எந்த வயதினரும் எந்த வயதுக்கும் சிறுநீரகம் தானம் கொடுக்கவும் முடியும் தானம் பெறவும் முடியும்.

சிறுநீரக கோளாறின் அறிகுறிகள் என்னென்ன…

ஒருவருக்கு சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறது என்றால், அதன் அறிகுறிகளாக கண்ணுக்கு மேல் வீங்குவது, கால்கள் வீக்கமடைவது, சிறுநீர் போகும் அளவு குறைவாதல் அல்லது சிறுநீர் நுரைத்துக் கொண்டு போவது, மூச்சிறைப்பு இவை அனைத்தும் பொதுவாக, சிறுநீரக கோளாறின் அறிகுறிகளாகும். இதுவே குழந்தைக்கு சிறுநீரக கோளாறு இருக்கிறது என்றால், சிறுநீர் அதிகமாக போவது, 8 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது, தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். உதாரணமாக குழந்தைகள் இரவில் அடிக்கடி எழுந்து தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறது என்றால், அது சிறுநீர் பிரச்னையாக இருக்கலாம். வயதுக்குரிய வளர்ச்சியில்லாம் இருப்பது போன்றவையும் சிறுநீரக கோளாறின் அறிகுறிகளாகும்.

சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தற்காத்து கொள்ளுவது எப்படி….

பொதுவாக, ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது என்றால், பாராசிடமால் மாத்திரையைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலர் என்ன செய்கிறார்கள் என்றால், 101,102 டிகிரி காய்ச்சல் இருக்கிறது என்றால், ஒருமுறை பாராசிடமால் போட்டு கேட்கவில்லை என்றதும், உடனே என்எஸ்ஐடிஸ் (nsaids) என்று சொல்லுகிற இபுப்ரோஃபென் (ibufrofen), மேஃபேனிக் ஆசிட்( mefenamic acid) போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் ஓவர் டோஸாகி சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதுபோன்று, வேறு ஏதேனும் நோய்க்காக ஓவர்டோஸ் மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வதும் தவிர்க்க வேண்டிய ஒன்று.

பெயின் கில்லர் மாத்திரைகள் அதிகமாக எடுத்துக் கொள்வதும் சிறுநீரகத்தை பாதிக்கும்.அதுபோன்று சிலர், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக, கைவைத்தியம் செய்து கொள்கிறேன் என்று தாங்களாகவே இலை, தழைகள் போன்ற மூலிகைகளை அரைத்து குடிப்பது. நாட்டு மருந்துகளை உரிய மருத்துவ ஆலோசனை இன்றி பவுடர் வகையிலோ, லேகியமாகவோ உட்கொள்ளுவதும் கூட சிலநேரம் ஓவர் டோஸாகி சிறுநீரகத்தை பாதிக்கும்.

எனவே, அநாவசியமாக மருந்துகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலும், சிறுநீரகம் பாதிக்கப்படும். இவற்றையெல்லாம் முறையாக கடைபிடித்து வந்தாலே சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

The post சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை… இனி குழந்தைகளுக்கும் சாத்தியம்! appeared first on Dinakaran.

Related Stories: