கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 2வது மலர் கண்காட்சி: சென்னை செம்மொழிப் பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

சென்னை: கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு செம்மொழிப் பூங்காவில் 2வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியானது செம்மொழி பூங்காவில் நாளை நடைபெறவுள்ளது. உதகை, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி போன்று கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து நடப்பாண்டு நாளை தொடங்கும் மலர் கண்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. வரும் 5ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கென உதகை, கொடைக்கானல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் வகையான வண்ண மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கூடாரம், சிற்பங்கள், மலர் அலங்காரங்கள் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். கண்காட்சியை காண வரும் பெரியோருக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறுவதால் வரும் 8ம் தேதி வரை வழக்கமாக அனுமதிக்கப்படும் இலவச அனுமதி கிடையாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 2வது மலர் கண்காட்சி: சென்னை செம்மொழிப் பூங்காவில் ஏற்பாடுகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: