செங்கோல் கட்டுக்கதை என்று கூறுகிறார்கள் செங்கோலுக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன: கும்பகோணம் ஆதீனம் பேட்டி

சென்னை: செங்கோல் கட்டுக்கதை என்று கூறுபவர்கள், செங்கோலை பற்றி எதுவும் தெரியாமல், கதை விட்டுக் கொண்டு இருக்கின்றனர்’’ என, கும்பகோணம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா கடந்த ஞாயிறு அன்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இந்த நிலையில், கும்பகோணம் ஆதீனம் அம்பலவான தேசிக பரமச்சாரியார், நேற்று மாலை டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னை வந்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘நாங்கள் டெல்லிக்கு சென்று, பிரதமர் மோடியிடம் தங்கச் செங்கோலை வழங்கினோம். அந்தச் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டு உள்ளது. அது திருவாவடுதுறை ஆதினத்தால், 1947ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. 75 ஆண்டுகளாக, அந்த செங்கோல் மியூசியத்தில் இருந்தது. அதை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வந்து, புதிய நாடாளுமன்றத்தில் வைத்தார். இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டோம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனையோ பேர் பாடுபட்டார்கள். ரத்தம் சிந்தினார்கள். அந்த சுதந்திரத்தின் போது, திருவாவடுதுறை ஆதினத்தால் இந்த செங்கோல் வழங்கப்பட்டது, என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

பிரதமர் செங்கோலுக்கு முன்புதான் விழுந்து நமஸ்காரம் செய்தார். இறைவனுக்கு முன்பு எப்படி விழுந்து வணங்குகிறோமோ,அதை போல் இந்த தங்க செங்கோலும் பூஜைகள் எல்லாம் செய்து வணங்கப்பட்டது. அதில் தவறு இல்லை. செங்கோல் பற்றி கூறுவதெல்லாம் கட்டுக்கதை என்று, சிலர் கூறுகின்றனர். கட்டுக்கதை எல்லாம் கிடையாது. அவர்கள் தான் கட்டுக்கதைகள் கூறுகின்றனர். அவர்களுக்கு இந்த செங்கோலை பற்றி எதுவும் தெரியாது. 1947ல் செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. சுதந்திர செங்கோல் என்று புத்தகங்கள் போட்டு இருக்கிறோம். அதை தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் அந்த ஆதாரங்களான புத்தகங்கள் பற்றி தெரிவித்திருக்கிறோம். இதையெல்லாம் நாங்கள் சுதந்திரதின புத்தகத்தில் வெளியிட்டுள்ளோம்.’’ இவ்வாறு அவர் கூறினார்.

The post செங்கோல் கட்டுக்கதை என்று கூறுகிறார்கள் செங்கோலுக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன: கும்பகோணம் ஆதீனம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: