அவசர சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக ஓட்டு; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி

சென்னை: திமுக உறுப்பினர்கள் டெல்லி மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், அவசர சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கெஜ்ரிவால் கூறினார்.மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்க நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று சென்னையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் இருந்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:
எட்டு ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு டெல்லி மக்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வெற்றி கிடைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் உண்டு, அதிகாரிகள் அரசின் உத்தரவுபடிதான் செயல்பட வேண்டும் என தீர்ப்பு அளித்தது. ஆனால் ஒன்றிய அரசு கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுப்பின்போது இந்த உத்தரவு செல்லாது என ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இது இந்திய வரலாற்றில் இதுதான் முதல்முறை. வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும். மக்களவையில் பாஜ பெரும்பான்மையாக உள்ளது.

ஆனால், மாநிலங்களவையில் 93 பாஜ உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் இந்த மசோதாவை வீழ்த்த முடியும். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரியுள்ளேன். எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறி இருக்கிறார். திமுக உறுப்பினர்கள் டெல்லி மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என கூறியுள்ளார். தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது 2024ம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமான, அதாவது அரைஇறுதி போல ஆகும். இதில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பு, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள ஒரு வலுவான செய்தியை கொண்டு சேர்க்கும். அடுத்த தேர்தலில் மோடி ஆட்சி திரும்பி வராமல் இருக்கும். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். காங்கிரஸ் நிச்சயமாக இந்த சட்ட மசோதாவை எதிர்ப்பார்கள். அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் விரைவில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அந்த ஆலோசனையில் கூட்டணி கணக்குகள் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது:
நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஆதரவு கோரி வந்தோம். முதல்வரின் ஆதரவு கிடைத்தது மகிழ்ச்சி. பாஜக ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் ஆட்சி நடத்த பாஜக முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஆளுநர் உரையை படிக்காமல் சென்றார். பஞ்சாப்பில் இதேபோன்ற நிலை தான். பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அவசர சட்ட மசோதாவுக்கு எதிராக திமுக ஓட்டு; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: