அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

538.(A). த்ரிபதாய நமஹ(Tripadhaaya Namaha)

சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு அடியேனும் அடியேனின் சில நண்பர்களும் அடியேனின் வீட்டில் அமர்ந்து, மடிக்கணினியில் கிரிக்கெட் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். EA Sports cricket 07 விளையாட்டைப் பெருமாபாலும் பல இளைஞர்கள் அறிவார்கள். அச்சமயம் அடியேனின் ஆசார்யனான டாக்டர் ஸ்ரீஉ.வே. கருணாகராச்சாரியார் ஸ்வாமி, அடியேனின் இல்லத்துக்கு எழுந்தருளினார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிக்கவரான கருணாகராச்சாரியார் அடியேனைப் பார்த்து என்ன விளையாடுகிறாய் என்று கேட்டார். மடிக்கணினியில் விளையாடும் மட்டைப்பந்து ஆட்டம் என்று அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். நானும் பார்க்கிறேன், நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஸ்வாமியும் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

கொஞ்ச நேரத்தில், ஆஹா இந்த மடிக்கணினி கிரிக்கெட் விளையாட்டு தத்வ த்ரயத்தை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்று வியந்து சொன்னார். பெரியோர்கள் எதைப் பார்த்தாலும் இறைவனோடு தொடர்பு படுத்திப் பார்ப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். நீங்கள் எப்படி விளையாட்டில் கூடத் தத்வ த்ரயத்தைக் காண்கிறீர்கள் என்று அடியேன் வியப்போடு சுவாமியிடம் கேட்டேன். அதற்கு அவர் விடையளித்தார்; உலகிலுள்ள அறிவில்லாத ஜடப் பொருள்களுக்கு அசேதனம் என்று பெயர். அறிவுள்ள ஜீவாத்மாக்களான நமக்கு சேதனம் என்று பெயர்.

இந்த அசேதனங்களையும் சேதனர்களையும் ஆளும் இறைவனுக்கு, ஈச்வரன் என்று பெயர். அசேதனம், சேதனம், ஈச்வரன் ஆகிய மூவிதத் தத்துவங்களையே “தத்வ த்ரயம்’’ என்று குறிப்பிடுகிறோம். இங்கே உன் விளையாட்டை எடுத்துக் கொண்டால், உனது மடிக்கணினிதான் ஜடப்பொருளாகிய அசேதனம். அதற்கு ஞானம் என்பது கிடையாது. அந்த மடிக்கணினியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களே உலகில் நாம் காணும் ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் ஆவார்கள். ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு மடிக்கணினியையும் அதன் திரையில் தோன்றும் வீரர்களையும் இயக்கும் நபர் ஈச்வரனின் ஸ்தானத்தில் உள்ளார்.

நாம் ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு கணினியையும் அதில் தெரியும் வீரர்களையும் இயக்குவது போலே, இறைவன் தன் சங்கல்பத்தால் உலகையும் அதில் வாழும் உயிர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், உணர்ச்சிவசப் பட்டுப் பார்ப்பவர் ஏதோ நிஜமாகவே ஒரு நபர் திரையில் இருந்து சிக்ஸர் அடிப்பதாக நினைக்கக் கூடும். அப்படித்தான் நாமெல்லோரும் ஏதோ நாமே நம் முயற்சியால் செயல்படுவதாக எண்ணுகிறோம்.

ஆனால், உண்மையில் இறைவன்தான் நம்மை இயக்குகிறான் என்பதை ஞானிகளே அறிவார்கள் என்று அழகாக விளக்கினார். இந்தக் கருத்தையே கபில முனிவரும் தமது சாங்கிய யோகத்தில் உபதேசம் செய்தார். போக்தா என்பது உலகிலுள்ள இன்பங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்களைக் குறிக்கும். போக்யம் என்பது இவ்வுலகில் நம்மால் அனுபவிக்கப்படும் ஜடப்பொருள்களைக் குறிக்கும். நியந்தா என்பது இவர்களை இயக்கி ஆளும் இறைவனைக் குறிக்கும். இந்த மூன்று தத்துவங்களையும் தமது உபதேசங்கள் மூலம் தெளிவாக விளக்கியதால், கபில வாசுதேவர் த்ரிபத – மூன்று தத்துவங்களை விளக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-A திருநாமம்.

இதே திருநாமம் வராகப் பெருமாளின் பெருமையைச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. அதை அடுத்த விளக்கத்தில் காண்போம்.

“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் மூன்று தத்துவங்களைப் பற்றிய தெளிந்த ஞானம் திருமாலின் திருவருளால் உண்டாகும்.

538.(B) த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)

538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்துவிட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டுவிட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. “திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும்’’ என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா. பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார்.

அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால் அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார்.

அதன்பின் பிரம்மா பழையபடிஉலகின் படைப்புத் தொழிலை நடத்தத் தொடங்கினார். இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.

வராகப்பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது.

வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும். இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. `ஓம்’ என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள். அவற்றுள் `அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது, `ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, `உ’ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது. இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.

`த்ரிபத’ என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துகளைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம் (B).

“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.

539. த்ரிதசாத்யக்ஷாய நமஹ (Thridhashaadhyakshaaya Namaha)

படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்தில் திருமாலாலே அமர்த்தப்பட்ட பிரம்ம தேவர், தேவர்கள் முனிவர்கள் ஆகிய ஒவ்வொரு குழுவையும் படைத்து வந்தார். அதைத் தொடர்ந்து மனிதர்களைப் படைக்க முற்பட்டார் பிரம்மா. முதற்கண் தனது உடலில் இருந்து சுவாயம்புவ மனு என்ற ஆணையும் சதரூபா என்ற பெண்ணையும் உருவாக்கினார். ஆனால், அந்த சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் வசிப்பதற்குரிய இடமே இல்லை.

மனிதர்கள் வாழ வேண்டிய மொத்த பூமியின் நிலப்பரப்பையும் ஊழிக் கடலுக்குள்ளே ஒளித்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். நாங்கள் வாழ்வதற்குரிய இடத்தைக் காட்டுங்கள் என்று சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் பிரம்மாவிடம் வேண்டினார்கள்.

அப்போது பிரம்மா, இந்நிலையில் என்னைப் படைத்த என் தந்தையான நாராயணன் ஒருவனால்தான் நம்மைக் காக்க முடியும் என்று சொல்லி விட்டு, மனதாரத் திருமாலை வேண்டினார். அப்போது கட்டை விரல் அளவுள்ள பன்றி ஒன்று பிரம்மாவின் மூக்கு துவாரத்தில் இருந்து வெளியே வந்து குதித்தது. அதுதான் திருமாலின் பன்றி வடிவிலான வராக அவதாரம். அதன் பின் பேருருவம் தாங்கிய வராகப் பெருமான், ஊழி வெள்ளத்துக்கு உள்ளே சென்று, ஹிரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டுத் தந்தார்.அதைக் கண்ட தேவர்கள், வராகனை வழிபட்டு வராகனுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.

தேவர்களுக்கு யாகத்தில் ஹவிர்பாகம் கிடைக்க வேண்டும் என்றால், பூமியிலே யாக யஜ்ஞங்கள் நிறைய நடக்க வேண்டும். அதற்கு அடிப்படையில் பூமி நன்றாக நிலைநிற்க வேண்டுமல்லவா. எனவே வராகர் பூமியை மீட்டுத் தந்தமையால்தான் தேவர்கள் அத்தனை பேரும் க்ஷேமம் அடைந்தார்கள். வேத கோஷம் என்றென்றும் பூமியில் ஒலிக்கும்படி வராகர் அருள் செய்தமையால் ரிஷிகள் க்ஷேமம் அடைந்தார்கள். தன் திருமேனியிலேயே யாக யஜ்ஞங்களைக் கொண்டவராக வராகர் விளங்கியதால், பெரிதாக வேத அறிவில்லாத நம் போன்றோரும் அவர் வடிவைக் காணும் போதே வேதங்களைப் பற்றியும் யாகங்களைப் பற்றியும் அறியும்படிச் செய்கிறார் வராகப் பெருமான். இப்படி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உடனே அவர்களை வந்து காப்பதால், வராகர் `த்ரிதசாத்யக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 539-வது திருநாமம். த்ரிதச என்ற சொல் தேவர்களைக் குறிக்கிறது. தச என்றால் பத்து, த்ரி என்றால் மூன்று, த்ரிதச என்றால் முப்பது என்று பொருள். மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும், அந்த 33 கோடி என்ற எண்ணிக்கையைச் சுருக்கமாக 30 என்று குறிப்பிட்டு த்ரிதச என்று சொல்வது வழக்கம்.

அத்யக்ஷ என்றால் பொதுவாகத் தலைவர் என்று பொருள். இங்கே ஆபத்தில் உதவுபவர் அத்யக்ஷ என்று பொருள்படுகிறது. அந்த வகையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் உடனே வந்துதவும் தலைவராக விளங்கும் வராகப் பெருமாள் த்ரிதசாத்யக்ஷ என்று அழைக்கப்படுகிறார்.

“த்ரிதசாத்யக்ஷாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை வராகப் பெருமாள் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வார்.

540. மஹாச்ருங்காய நமஹ (Mahaashrungaaya Namaha)

ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் பகவானைப் பார்த்து, உன்னுடய அவதாரங்களிலேயே வராக அவதாரம் அளவில் பெரியதா அல்லது திரிவிக்கிரம அவதாரம் அளவில்
பெரியதா எனக் கேட்டார். பகவான் ஆழ்வாரிடம், தாங்கள் தலைசிறந்த பக்தரல்லவோ. பக்தரான நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து இதற்கான விடையை எனக்குக் கூறுங்கள் என்றார். ஆழ்வாரோ, பகவானே இப்போதே அந்த இரண்டு அவதாரங்களின் அனுபவத்தையும் எனக்குத் தந்தால், நான் ஒப்பிட்டுப் பார்த்து இதற்கான விடையைத் தருகிறேன் எனக் கூறினார். பெருமாள் வராகனாக பூமியை குடைந்தெடுக்கும் காட்சியைப் பொய்கை ஆழ்வாருக்குக் காண்பித்தார். மேலும், ஓங்கி உலகளந்த உத்தமனாகவும் காட்சி அளித்தார்.

பொய்கை ஆழ்வார் இரண்டு அவதாரங்களையும் சேவித்தார். இப்போது தமது பாட்டில் இதற்கான விடையைச் சொல்கிறார் பொய்கையாழ்வார். பொய்கை ஆழ்வார் அருளிய முதல் திருவந்தாதியின் 9-வது பாசுரமாக இது அமைந்துள்ளது.

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கிடந் தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல்கிடந்தது அன்றே – விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துலங்க
மாவடிவின் நீயளந்த மண்

ஓங்கி உலகளந்த பொழுது உன் திருவடி அளவிற்கு இந்த மண்னுலகம் இருந்தது. அதனால் உன் ஒரு திருவடியால் இந்த மண்ணுலகத்தை அளந்தாய். அதே சமயம் நீ வராகனாக அவதரித்து இந்த பூமியை மீட்கும் பொழுது உன் கோரைப் பற்களுக்கு நடுவே ஒரு சிறிய மணி இருப்பது போல்தான் பூமி இருந்தது. திரிவிக்கிரமனாக அவதரித்த பொழுது உன் முழுப் பாத அளவிற்கு இருந்த பூமி, வராகனாக அவதரித்த பொழுது கோரைப் பற்களுக்கு நடுவே சிறுமணி இருப்பது போல் சிறியதாகக் காட்சி அளித்தது.

இதன் மூலம் வராகப் பெருமாளாக அவதரித்த வடிவே பெரியது என்று பாட்டில் கூறினார். இப்படிப் பூமியின் அளவை வைத்துப் பெருமாளின் வடிவைக் கணக்கிட்டார் பொய்கை ஆழ்வார். ஏன் வராக பெருமாள் இவ்வளவு பெரிய வடிவை எடுத்தார் என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை சுவையான விளக்கம் அளித்துள்ளார். பல தானங்கள் செய்யும் பெரிய செல்வந்தர், தன் வீட்டுக்கு நான்கு நபர்கள் சாப்பிட வந்தால்கூட நாற்பது நபர்கள் சாப்பிடும் அளவிற்கு உணவு தயாரிப்பாராம். அது போல வராக பெருமாள் கருணையே வடிவானவர்.

தனது திருமேனியின் அழகையே அடியார்களுக்கு விருந்தாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவதரித்தவர். அதனால்தான் அடியார்கள் நன்றாக அனுபவிக்கட்டும் என்று கருதி மிகப் பெரிய வடிவத்தை எடுத்தார். வராகப் பெருமாளின் ஒரு பல் மொத்த பூமியைத் தாங்குகிறது என்றால் எவ்வளவு பெரிய வடிவம். ஆக, பூமியின் வடிவைக் கருத்தில் கொள்ளாமல், பூமியை மீட்க இந்த வடிவம் போதும் என்று கணக்கிடாமல், தன் அளவற்ற கருணையின் அளவைக் கருத்தில் கொண்டு பூமியே தன் பற்களில் சிறுமணி போல் இருக்கும்படித் தோன்றியதால், வராகப் பெருமாள் மஹாச்ருங்க என்று அழைக்கப்படுகிறார். மஹாச்ருங்க என்றால் பெரிய கோரைப் பல்லை உடையவர் என்று பொருள்.

மஹா என்றால் பெரிய, ச்ருங்க என்றால் கோரைப்பல். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 540-வது திருநாமம்.

“மஹாச்ருங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குத் தனது அருள் பன்மடங்கு கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: