தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று முதல் வாரம் மும்முறை இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (1ம் தேதி) முதல் வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1904ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையாக ரயில்கள் இயங்கிக் கொண்டிருந்த நெல்லை – தென்காசி ரயில் வழித்தடம், 21.9.2012 அன்று மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டது. நூற்றாண்டு பெருமை கொண்ட இவ்வழித்தடத்தில், அகலப்பாதை அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் தலைநகர் சென்னைக்கு ரயில்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில் கடந்த ஏப்.8ம் தேதி சென்னை தாம்பரத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக இந்த ரயில் வாரம் ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இன்று முதல் வாரம் மும்முறை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ரயிலுக்கான புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று(வியாழன்) முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டையை காலை 10.50 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக நாளை ஜூன் 2ம்தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன். வெள்ளிக் கிழமைகளில் மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்றடையும். 2 இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், 5 எக்கனாமிக் மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், மூன்று முன்பதிவில்லா பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டு இருக்கும். தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் பயணிக்க 13 மணி 50 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

The post தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று முதல் வாரம் மும்முறை இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: