அதிமுக ஆட்சியின் நிர்வாக முறைகேட்டால் மாற்று டயர்கள் இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்

* முறையாக பராமரித்து இயக்க வேண்டும்
* பயணிகள், ஊழியர்கள் கோரிக்கை

வேலூர்: அதிமுக ஆட்சியில் நடந்த நிர்வாக முறைகேட்டால் மாற்று டயர்கள் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது 8 கோட்டங்களாகவும், 23 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரம் பணியாளர்களைக்கொண்டு, 21ஆயிரத்து 500 பஸ்கள் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம். நாளொன்றுக்கு 2 கோடிக்கும் மேலான மக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை பஸ்கள் இயங்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இப்படி, அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் பெருமையை அடுக்கிக்கொண்டே போனாலும், ஆண்டுதோறும் ஏற்படும் நஷ்டம் மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுகிறது.

தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பயன்படுத்தப்படும் புதிய டயரை குறைந்தபட்சம், ஒரு லட்சம் கி.மீ வரை இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகளின் உத்தரவாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியின்போது, ஒரு லட்சம் கி.மீக்கும் அதிகமாகவே டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனால், டயர் சேதாரத்தால், பஸ் நின்றால் அதை காரணம் காட்டி, அரசு பஸ் டிரைவர்களுக்கு மெமோ, சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை புதிய டயர்கள் வாங்கவில்லை என்று போக்குவரத்து கழகத்தில் இருந்து புகார்கள் எழுகிறது. புதிய டயர் கொள்முதல் செய்வதை நிறுத்தி, பல ஆண்டுகள் ஆவதாக தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தால், ஜப்தி செய்யப்பட்ட பஸ்களின் டயர்களை எடுத்து, தற்போது இயங்கி வரும் பஸ்களுக்கு மாற்றப்படுகிறது.

ஒரு லட்சத்து, 25 ஆயிரம் கி.மீ, வரை டிரைவர்கள் டயரை பயன்படுத்தி வந்தனர். பழைய டயர்களை வைத்து, எத்தனை நாட்களுக்கு பஸ்சை இயக்க முடியும். டயர் பழுதாகி நடுவழியில் நிற்பதற்கு, டிரைவர்களை மட்டும் குறை கூறுவது எந்த வகையில் நியாயம். டயர் மட்டுமின்றி, உதிரி பாகங்கள் ஏதும் வாங்கி கொடுப்பது இல்லை. தொலைதூரங்களுக்கு, இரவில் செல்லும் டிரைவர்கள், முகப்பு விளக்குகளை தங்கள் சொந்த செலவில் வாங்கி பயன்படுத்தும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தள்ளப்பட்டனர். இதற்கிடையில், புதிதாக வாங்கப்பட்ட 2 ஆயிரம் பஸ்களில் இருந்த ஸ்ெடப்னி டயர்களை தொலைதூரம் செல்லும் பஸ்களில் மாற்றி இயக்கப்பட்டு, புதிய டயர்களை வாங்காமல் காலம் கடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு எம்டிசியில் இயக்கப்படும் பஸ்களுக்கு 4,783 டயர்களும், எஸ்இடிசி 3 ஆயிரம் டயர்களும், விழுப்புரம் கோட்டத்திற்கு 6,708 டயர்களும், சேலம் கோட்டத்திற்கு 4,848 டயர்களும், கோவை கோட்டத்திற்கு 7,200 டயர்களும், கும்பகோணம் கோட்டத்திற்கு 6,736 டயர்களும், மதுரை கோட்டத்திற்கு 6,048 டயர்களும், திருநெல்வேலி கோட்டத்திற்கு 3,502 டயர்கள் என மொத்தம் 42 ஆயிரத்து 825 டயர்கள் தேவை என தெரியவந்தது. இதற்காக ₹75 கோடி செலவு செய்யப்பட்டு புதிய டயர்கள் வாங்கப்படும். இதன் மூலம் பழைய பஸ்களை விபத்துகள் இல்லாமல் இயக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிதாக எத்தனை டயர்கள் வாங்கப்பட்டது என்று தெரியவில்லை. தற்போது, தமிழ்நாட்டில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில் ஸ்டெப்னி (மாற்று) டயர்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது.

இதனால் எதிர்பாராத விதமாக அரசு பஸ் டயர் பெஞ்சராகி நடு வழியில் நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பணியாளர்கள் விரைந்து வந்து பஞ்சர் ஆன அந்த டயரை கழட்டி மாற்று டயர் பொருத்திய, பின்னரே பஸ் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. இதனால் இனி வரும் காலங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் அரசு பஸ்களில் ஸ்டெப்னி டயர்களுடன் இயக்குவதற்கும், நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகத்தையும் லாபத்தில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க பயணிகள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

உதிரிபாகங்களில் கமிஷன்
உதிரிபாகங்கள், பேட்டரி கொள்முதலில் அபரிமிதமான கமிஷன் பெறப்படுகிறது. அதிக கமிஷன் தரும் டயர் நிறுவனங்களிடம் இருந்து டயர்கள் கொள்முதல் செய்யப்படுவதால் சமீபகாலமாக வரும் டயர்கள் தரமற்றவையாக உள்ளது. தரமில்லாத போலி பேட்டரிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன். ஒவ்வொரு டெப்போக்களிலும் கடந்த ஆட்சியில் 10 முதல் 20 நபர்கள் எந்த வேலையும் செய்யாமல், ‘ஓடி’ என்ற பெயரில் சும்மா இருந்து சம்பளம் பெற்றுள்ளனர். இதனால் போக்குவரத்து கழகம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. மேலும் சிலர் புரோக்கர் வேலை செய்து, பலரிடம் டிப்போ, வண்டி மாற்றம் என்ற பெயரில் வேலை செய்யாமல் இருப்பதற்கு ₹2 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து கழகத்தை சந்தை மடங்களாக மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கடந்த ஆட்சியில் ரூ500 கோடி கரப்ஷன்
பஸ்களை பராமரிக்காமை, தரமற்ற உதிரி பாகங்கள், லஞ்சம் பெற்று போட்ட பஸ் டிரைவர்களால் ஆண்டுதோறும் அரசு பஸ்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கி வருகிறது. 2013-14ம் ஆண்டில் 1,318 உயிரிழப்புகள் நடந்துள்ளது. 2014-15ம் ஆண்டில் 1,331 உயிரிப்புகள் நடந்துள்ளது. 2015-16ம் ஆண்டில் 1,460 உயிரிழப்புகள் நடந்துள்ளது. 2016-17ம் ஆண்டில் 1,373 உயிரிழப்பு நடந்துள்ளது. 2017-18ம் ஆண்டில் 1,247 உயிரிழப்புகள் நடந்துள்ளது. 2018-19ம் ஆண்டில் 1,159 உயிரிழப்பு, 2019-20ம் ஆண்டில் 834 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இப்படி கடந்த ஆட்சியில், ரூ500 கோடி வரையில் கரப்ஷன் நடந்துள்ளதாக போக்குவரத்து துறையில் உள்ள ெதாழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

The post அதிமுக ஆட்சியின் நிர்வாக முறைகேட்டால் மாற்று டயர்கள் இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள் appeared first on Dinakaran.

Related Stories: