மல்யுத்த வீரர்களின் பாலியல் விவாகரத்தில் விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: மல்யுத்த வீரர்களின் பாலியல் விவகாரத்தில் விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்பியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக போராடியும் பலன் அளிக்காததால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நாளில், அந்த கட்டிடம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் தங்கள் பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதற்கான ஹரித்வாரில் திரண்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் சங்கத்தினர் மல்யுத்த வீரர்களை சமாதானம் செய்து பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்திர பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; மல்யுத்த வீரர்களின் பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், பாலியல் புகார் அளித்த இளம் மல்யுத்த வீராங்கனையின் அடையாளம் வெளியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. புகார் அளித்த வீராங்கனையின் அடையாளம் சமூக வலைத்தளங்களில் வெளியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், அடையாளம் வெளியானது போக்சோ சட்டப்படி குற்றம் என்றும் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பியுள்ளது.

The post மல்யுத்த வீரர்களின் பாலியல் விவாகரத்தில் விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: