சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழ்நாட்டில் மேலும் 5 நாள் மழை

சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் கேரளாவில் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், சில இடங்களில் வெயில் மற்றும் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. கரூரில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வேலூரில் 104 டிகிரி(பாரன்ஹீட்) சென்னையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இதன் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.

இதையடுத்து, தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 4ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி முதல் 102 டிகிரியை ஒட்டியே இருக்கும். இதற்கிடையே, தென் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று இன்று முதல் 4ம் தேதி வரை வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

The post சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழ்நாட்டில் மேலும் 5 நாள் மழை appeared first on Dinakaran.

Related Stories: