10 ஆண்டுகால அதிமுக ஆட்சி போல் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் தமிழ்நாடு அரசு: முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய மன நிறைவுடன் திரும்புகிறேன்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்

சென்னை: ‘தமிழ்நாடு கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இருந்ததுபோல் இல்லாமல் மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது’ என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் உங்களுடன் விளக்கமாக சொல்லவே இந்தக் கடிதம்.

மே 23- செவ்வாய்: சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், தொழில் – முதலீட்டு ஊக்குவிப்பு – வணிகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். எனக்கான உணவு, என் உடல்நலன் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும் பொருட்டு என் துணைவியாரும் உடன்வந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியத் தூதர் குமரன் வரவேற்றார். சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் ஹோட்டல் வரவேற்பரங்கில் காத்திருந்து, அன்பைப் பொழிந்து வரவேற்பளித்தனர். டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுதர்சன் சீனிவாசனும் வரவேற்றார். நண்பர் சிங்கப்பூர் ராம் தனது இல்லத்திலிருந்து உணவை கொண்டு வந்து பரிமாறினார். அதில் அன்பும் சுவையும் மிகுந்திருந்தது.

மே 24-புதன்: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்புடன் அன்றைய நாள் தொடங்கியது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாலையில் சிங்கப்பூரின் தொழில் – வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான தமிழர் ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன். சிங்கப்பூர்வாழ் தமிழ் நெஞ்சங்கள் கலாச்சார-பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான தமிழர் சண்முகம் அந்த விழாவில் சந்தித்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சிங்கைவாழ் தமிழர்களின் உணர்வையும் உழைப்பையும், சிங்கப்பூர் நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் என்னுடைய பேச்சில் எடுத்துரைத்தேன்.

மே 25-வியாழன்: காலைப் பொழுதில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் அவர்களைச் சந்தித்தேன். லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தேன். சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். இரவு 11 மணிக்கு ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான ஒசாகா சென்றடைந்தோம். விமான நிலையத்தில், இந்தியத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் நிகிலேஷ் கிரி வரவேற்பளித்தார்.

மே 26 -வெள்ளி: ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. பின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன். ஜப்பானில் பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தும் அன்பர் குறிஞ்சி செல்வன் மற்றும் அவர்களின் துணைவியார், தமிழ்நாட்டு உணவு வகைகளை எங்களுக்கு வழங்கினர். ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி அவர்களுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பும் அன்றைய மதிய உணவு வேளையில் நடைபெற்றது. ஒசாகாவில் உள்ள கோமாட்சு என்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம். நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயியால் தொடங்கப்பட்டது கோமாட்சு நிறுவனம். தன்னுடைய நிலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கருவிகளை உருவாக்கத் தொடங்கி, இன்று உலகளவில் பெயர் பெற்றுள்ளது.

மே 27 , சனிக்கிழமை: ஜப்பான் நாட்டில் ஒசாகாவும் ஒரு காலத்தில் தலைநகராக இருந்துள்ளது. அதன் அடையாளம்தான் பழமையான கோட்டை. அதனைப் பார்க்கச் சென்றோம். ‘தி இந்தியன் கிளப்’ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவுக்குப் புறப்பட்டோம். விழாவில், தமிழர் கலை வடிவமான பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. ஜப்பான் நாட்டில் பரதநாட்டியக் கலையை முதன்முதலில் கற்றுக் கொண்டவரான அகிமி சகுராய், அதனை ஜப்பானிய மாணவியர் பலருக்கும் கற்றுத் தந்திருக்கிறார்.

மே 28-ஞாயிறு: ஒசாகாவில் இருந்து டோக்கியோவுக்கு அதிவேக புல்லட் ரயிலில் பயணித்தோம். ஒசாகா-டோக்கியோ இரண்டு நகரங்களுக்கும் இடைப்பட்ட தூரம், ஏறத்தாழ 500 கிலோ மீட்டர். இரண்டரை மணி நேரத்தில் 500 கிலோமீட்டரை கடந்து டோக்கியோ வந்தடைந்தோம். ஜப்பானில் பொதுப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, ரயில்தான். நம் நாட்டில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறைய உள்ளன. அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் புல்லட் ரயில் ஏழை-எளியவர்களும் பயணம் செய்யும் வகையில் அமைய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன். டோக்கியோவில் தமிழ்ச் சங்கங்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மே 29 திங்கள்: ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனுடனான சந்திப்புடன் காலைப் பொழுது தொடங்கியது. சென்னையில் என் வீட்டுக்குப் பக்கத்து கட்டடத்தில்தான் ஜப்பான் நாட்டின் தூதரகம் உள்ளது” என்றேன். திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

மே 30- செவ்வாய்: காலையில் என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். புதிய தொழில்நுட்பங்கள் எந்தளவில் பயன்படுத்தப்படுகின்றன, எதிர்காலத்தில் அவை எந்தெந்த வகையில் உதவும் என்பதை என்.இ.சி. நிறுவனத்தினர் விளக்கிக் கூறினர். மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனைகள் சார்ந்த கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. சூரியன் உதிக்கும் நாடு என்று ஜப்பானுக்குப் பெயர் உண்டு. நாம் உதயசூரியனின் ஒளியால் விடியல் கண்ட தமிழ்நாட்டுக்காரர்கள். இன்னும் சிறிது நேரத்தில், இங்கே பொழுது புலரும். தாய்த் தமிழ்நாட்டை நோக்கிய பயணம் தொடங்கும். கடல் கடந்த பயணத்தால், தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் வருகிறேன்.

‘கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது’ என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன். திமுகவினரின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். சூரியன் உதிக்கும் நாடு என்று ஜப்பானுக்குப் பெயர் உண்டு. நாம் உதயசூரியனின் ஒளியால் விடியல் கண்ட தமிழ்நாட்டுக்காரர்கள். இன்னும் சிறிது நேரத்தில், இங்கே பொழுது புலரும். தாய்த் தமிழ்நாட்டை நோக்கிய பயணம் தொடங்கும். கடல் கடந்த பயணத்தால், தமிழ்நாட்டின் நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் வருகிறேன்.

The post 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி போல் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் தமிழ்நாடு அரசு: முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய மன நிறைவுடன் திரும்புகிறேன்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: