மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு ஹெச்.எம், ஆசிரியை நியமனம்: ஒரே இடத்தில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் பணியால் சர்ச்சை

கோவை: மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் வெள்ளிங்கிரி அடுத்த தாணிக்கன்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இதனால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது. அங்கிருந்த தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த கலந்தாய்வில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் இடங்கள் இருப்பதாக காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 29ம் தேதி நடந்த துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், தாணிக்கன்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியை ஒருவரும், நேற்று முன்தினம் நடந்த இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் உதவி ஆசிரியை ஒருவரும் மாவட்ட கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் ஒரு குழந்தைகூட இல்லாத நிலையில், பள்ளிக்கு தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாணிக்கன்டி பள்ளியை தேர்வு செய்த ஆசிரியைகள் இருவரும் ஏற்கனவே ஒரே பள்ளியில் பணியாற்றியவர்கள்.

இவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள மாற்று பணியிடமானது அவர்களின் வீட்டிற்கு மிக அருகில் இருப்பதாகவும், இந்த நியமனம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பள்ளியை மூட தற்போது வரை உத்தரவு வரவில்லை. அதனால் இடமாறுதல் கலந்தாய்வின்போது சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள இடம் காண்பிக்கப்பட்டது. இப்பள்ளியை தேர்வு செய்தவர்களுக்கு வேறு பள்ளிக்கு மாற்று பணியிடம் வழங்கப்படும்’’ என தெரிவித்தனர்.

The post மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு ஹெச்.எம், ஆசிரியை நியமனம்: ஒரே இடத்தில் பணியாற்றியவர்களுக்கு மீண்டும் பணியால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: