தடை அதை உடை… இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்கும் 77வயது மூதாட்டி: இதய நோயுடன் மனம் தளராத சிங்கப்பெண்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் புதிய முகமது யார் தெருவை சேர்ந்தவர் ராமாமிர்தம் (77). இவர், சிறுவயதில் தனது தந்தையுடன் கிணற்றுக்கு செல்லும்போது நீச்சல் கற்றுக்கொண்டார். தந்தையை ஆசானாக ஏற்று பலவகையான நீச்சலை கற்றுக்கொண்டார். இந்நிலையில், தற்போது சிறுவர்கள், இளைஞர்கள், சிறுமிகள் என பலருக்கும் இலவசமாக நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். 77 வயதான நிலையிலும் சுறுசுறுப்புடன் நீச்சல் பயிற்சி கொடுத்து அசத்தி வரும் ராமாமிர்தத்தை பலரும் பார்த்து வியக்கின்றனர்.

இதுகுறித்து ராமாமிர்தம் கூறியதாவது: எனக்கு 5 வயது இருக்கும் போதே தந்தையிடம் இருந்து பலவகை நீச்சலை கற்றுக்கொண்டேன். அப்போது தந்தையின் உடையை பிடித்துக்கொண்டு நீந்தி பழகினேன். பொழுதுப்போக்காக நீச்சல் அடிக்க ஆரம்பித்தது, பின்னர் அது நிரந்தர பழக்கமாகி விட்டது. எனது மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளேன். என்னிடம் 5வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் நீச்சல் கற்றுக்கொள்கின்றனர். வயதானாலும் கற்பிக்கும் ஆர்வம் தொடர்வதால், அவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து வருகிறேன். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் ஆபத்து காலங்களில் நீச்சல் பயிற்சி கட்டாயம் உதவும் என்றார்.
தடை அதை உடை என்பதுபோல், கடந்த 10 ஆண்டுகளாக மூதாட்டி ராமாமிதர்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையை தொடர்ந்து வந்தாலும் அதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிங்கப்பெண்ணாக நீச்சல் பயிற்சி அளிப்பதை தொடர்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

The post தடை அதை உடை… இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்கும் 77வயது மூதாட்டி: இதய நோயுடன் மனம் தளராத சிங்கப்பெண் appeared first on Dinakaran.

Related Stories: