ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தேனியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா

தேனி: தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற பள்ளிகளில் 427 பேருந்துகள் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது . அனைத்து பேருந்துகளும் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்க இருப்பதை ஒட்டி, தேனி மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட ஆயுதப்படை மைதானத்தில், தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் கல்வி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். இம்முகாமில் 427 பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, முதுலுதவி பெட்டி, வாகனத்தில் ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரைப்பலகை உறுதியாக உள்ளதா, சிறு குழந்தைகள் வாகனத்திற்கு முன்னால் உள்ளார்களா என்பதை கண்காணிப்பதற்கு வாகனத்தின் முன்புறம் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பின்புறம் கேமரா மற்றும் சென்சார் ஒழிப்பான் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பிரேக்கின் தன்மை, வேகக் கட்டுப்பாட்டு கருவி போன்ற ஆய்வுகளை தேனி ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியை ஒட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை, உடலில் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளும் நடைபெற்றது தொடர்ந்து பள்ளி வாகனங்களை ஓட்டும், ஓட்டுநர்களுக்கு பள்ளி வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக ஒட்டி செல்வது என்பது குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

The post ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தேனியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா appeared first on Dinakaran.

Related Stories: