தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நடக்கிறது; கண்களை கவரும் ‘கலர்புல்’ ஓவிய கண்காட்சி

* தலைவர்களின் ஓவியம் தத்ரூபம்
* கடல்மண் ஓவியங்கள் கலக்கல்

திருவில்லிபுத்தூர்: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு சார்பில் திருவில்லிபுத்தூரில் நடைபெறும் ஓவிய கண்காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. 7 வகை வண்ண மணல்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் பார்ப்போரை ஆச்சர்யப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு சார்பில் திருவில்லிபுத்தூரில் ஓவிய கண்காட்சி கடந்த 28ம் தேதி தொடங்கியது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் ஓவிய கண்காட்சியை திருவில்லிபுத்தூர் தொழிலதிபர் சோலையப்பன் திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி, பாரதியார், அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், பிரதமர் மோடி, ஜெயலலிதா, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வகையான பேப்பர்களை கொண்டு உருவாக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் படம் மிகவும் தத்ரூபமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

திருவில்லிபுத்தூரை சேர்ந்த வாசுகி செல்வகுமார் என்பவரால் உருவாக்கப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட நீர் வண்ணங்கள் மூலம் வரையப்பட்ட ஓவியங்கள் இருந்தன. இதில் இயற்கை காட்சிகள், காஞ்சி மகா பெரியவர் மற்றும் வனவிலங்குகள், தேச தலைவர்கள் படங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தன. இதே போல் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டார பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரைந்த ஓவியங்கள் வித்தியாசமாக இருந்தன. இவர் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் கிடைக்கக்கூடிய ஏழு வகை வண்ண மணல்களால் உருவாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் படம் அசத்தலாக இருந்தது. குறிப்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஓவியத்தில் தொப்பிகள் அரிசியை கொண்டும், உருவங்கள் பல்வேறு பயறு வகைகளை கொண்டும் உருவாக்கப்பட்டிருந்தது கண்களை கவர்ந்தது.

இதேபோல் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் கனிமொழி எம்பி உள்ளிட்டவர்களின் ஓவியங்களும் 7 வகையான வண்ண மணல்களை கொண்டு மிகவும் அழகாக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது. இந்த ஓவிய கண்காட்சியை திருவில்லிபுத்தூர் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். பரபரப்பாக இயங்கி வரும் இந்த உலகில் பள்ளி மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் பள்ளிக்கூட பாடத் திட்டங்களில் இடம் பெற்றுள்ள பென்சில் ஓவியங்கள் முதல் அனைத்து வகையான ஓவியங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை கண்டு ரசிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நடக்கிறது; கண்களை கவரும் ‘கலர்புல்’ ஓவிய கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: