‘‘மக்களை தேடி மேயர்’’ திட்டம் மூலம் அனைத்து பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு தீர்க்கவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வேண்டுகோள்

பெரம்பூர்: சென்னை திருவிக. நகர் மண்டலத்தில் ‘’மக்களை தேடி மேயர்’’ என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் பிரியா பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு முகாமில், சாலை வசதி, பள்ளிக்கூட கட்டிட வசதி, சமுதாயக்கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் பணிகள், குடியிருப்பு வசதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 331 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 272 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், திருவிக. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், திருவிக. நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி கொறடா நாகராஜன், மண்டல அதிகாரி முருகன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது; பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை குறிப்பிட்ட அந்த அலுவலகத்திற்கு செல்லாமல் ஒரே இடத்தில் மேயரை நேரடியாக சந்தித்து மனு அளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்து ஏற்கனவே ஒரு மண்டலத்தில் அது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. தற்போது இரண்டாவதாக திருவிக. நகர் மண்டலத்தில் நடைபெறுகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி அடுத்த கட்டமாக 15 மண்டலங்களில் இந்த மனுக்கள் பெற்ற பிறகு மக்கள் இருக்கின்ற பகுதிகளுக்கு மேயர் செல்லவேண்டும் என்ற கோரிக்கையை தற்போது நான் மேயரிடம் வைத்துள்ளேன். நம்முடைய எஜமானர்கள் என்று போற்றப்படுபவர்கள் மக்கள்தான்.

ஆகவே அந்த மக்களை தேடி செல்வதில் எந்தவித தவறும் தடையும் இருக்க முடியாது. 15 மண்டலங்களில் மக்களை தேடி மேயர் என்ற நிகழ்வு முடிந்ததும் பகுதி வாரியாக முதற்கட்டமாக குடிசை பகுதிகள் நிறைந்து இருக்கின்ற இடம், கால்வாய் ஓரங்களில் வசிக்கின்ற மக்கள், சாலையோரங்களில் உள்ள மக்கள் என்று அந்த பகுதி மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அதற்குண்டான நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேயருக்கு அன்பான வேண்டுகோளை வைக்கின்றேன். இந்த நிகழ்வு தொடரவும் பல நூறு மக்கள் பயனடையவும் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

The post ‘‘மக்களை தேடி மேயர்’’ திட்டம் மூலம் அனைத்து பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு தீர்க்கவேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: