தேனியில் காமராஜர் பஸ் முனையமான பழைய பஸ் நிலையம் ‘பழைய’ நிலைக்கு வருமா?.. பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி: தேனியில் காமராஜனர் பஸ் முனையமான பழைய பஸ் நிலையத்தை சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி நகரானது மாவட்டத்தின் தலைநகராகவும், மாவட்டத்தின் மையப் பகுதியாகவும் அமைந்துள்ளது. தேனி நகரமானது மாவட்ட தலைநகராக மாறியதை தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்காரணமாக தேனி நகர் மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு சந்திப்பில் செயல்பட்டு வந்த காமராஜர் பஸ் நிலையம் இட நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, தேனி நகர் வால்கரடு பைபாஸ் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.

இப்புதிய கர்னல் ஜான்பென்னிகுக் பஸ் நிலையம் கட்டப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து தேனியில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று வருகின்றன. அதேசமயம் காமராஜர் பஸ் நிலையம் காமராஜர் பஸ் முனையமாக மாற்றப்பட்டு தற்போது பழைய பஸ் நிலையமாக செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து கம்பம், குமுளி, போடி மூணாறு போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்கின்றன. இதனால் இப்போதும், பழைய பஸ்நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பியே உள்ளது. காமராஜர் பஸ் முனையமான பழைய பஸ் நிலையத்தில் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அப்போதிருந்த நகராட்சி நிர்வாகம் மூலமாக பழைய பஸ் நிலையத்தினை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டது.

இந்த பிளாட்பாரமானது பஸ் நிலையத்தை சுற்றி கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடு, மதுரை ரோட்டில் அமைக்கப்பட்டு பிளாட்பாரத்தில் இரும்பு கைப்பிடியும் அமைக்கப்பட்டது. அதன்பின்,அதிமுக ஆட்சியில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பழைய பஸ் நிலையம் ேமாசமான நிலைக்கு சென்றுவிட்டது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழைய பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பிளாட்பாரத்தை அகற்றி கழிவுநீரோடையை சுத்தப்படுத்துவதற்காக பிளாட்பாரம் தோண்டப்பட்டது. பிளாட்பாரம் தோண்டப்பட்டதால் பிளாட்பாரத்தை ஒட்டி உள்ள பிரமாண்ட கடைகள் முதல் பெட்டிக்கடைகள் வரையிலான கடை நடத்தும் வியாபாரிகள் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தோண்டப்பட்ட கழீவுநீரோடையை கடந்து கடைகளுக்கு வருவதற்காக அந்தந்த கடைக்காரர்கள் சிறிய அளவில் மரப்பாலங்களை அமைத்துள்ளனர். இதில் ஏறி வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

இப்பழைய பஸ்நிலையத்தில் போடி, குமுளி, கம்பம் செல்லும் பஸ்கள் பஸ்நிலையத்தின் தெற்கு பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். இந்த இடத்தில் நகராட்சி சார்பில் பிளாட்பாரம் அமைத்து ,இதன் மேல் தகரத்தினாலான மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது . இதனால் போடி குமுளி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த நிழற்குடையில் நின்றிருந்து பஸ்கள் வந்தவுடன் பஸ்களில் பயணித்து வந்தனர். இத்தகைய பஸ் நிழற்குடையை கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புக்காக அகற்றியது. கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் இந்த நிழற்குடை அப்புறப்படுத்தப்பட்டதால் பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகள் நிழல் இல்லாமல் வெய்யிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

மேலும், பஸ் நிலையத்திற்குள்ளேயே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள், கார்கள் வந்து செல்வதை தடுக்காமல் போக்குவரத்து போலீசார் உள்ளதால் பஸ்நிலையத்திற்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம், தேனி காமராஜர் பஸ் முனையமான பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கழிவுநீரோடையை மிகவிரைவில் தூர்வாறி, கழிவுநீரோடை மீது மீண்டும் பேவர் பிளாக் கற்கள் பதித்த பிளாட்பாரம் அமைக்கவும், பஸ்நிலையத்திற்குள் போடி, கம்பம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் நிழற்குடை அமைக்கவும், வணிகவளாக கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கணேசன் கூறியதாவது: ‘‘பழைய பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பியே உள்ளது. கோடை வெயில் வாட்டி வரும் போது, இங்கிருந்த நிழற்குடை அப்புறப்படுத்தப்பட்டதால் பயணிகள் வெயில் கொடுமை தாங்க முடியாமல் ஆங்காங்கே உள்ள கடைகளின் தகர மேற்கூரை நிழலில் ஒதுங்கும் அவலம் உள்ளது. மேலும் பஸ்நிலையத்திற்குள் கட்டுபாடின்றி கார்கள், ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. சில கார், ஆட்டோக்கள் பஸ்நிலையத்திற்குள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைதவிர்க்க போக்குவரத்து போலீசார் உதவியுடன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post தேனியில் காமராஜர் பஸ் முனையமான பழைய பஸ் நிலையம் ‘பழைய’ நிலைக்கு வருமா?.. பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: