கோடை விடுமுறைக்கு பின் 7ம் தேதி திறப்பு பள்ளிகளில் தூய்மைப்பணி செய்ய கல்வித்துறை அதிரடி உத்தரவு: முதல்நாளிலேயே மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம், சீருடை

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, 2023-24ம் கல்வி ஆண்டுக்காக 1 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வளாகங்களில் ஏற்பட்டுள்ள புதர்கள், குவிந்துள்ள குப்பை ஆகியவற்றை அகற்றி தூய்மை செய்ய வேண்டும். அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர்கள் அறை, சமையலறை, கழிப்பறைகள் நன்கு தூய்மை செய்யப்பட வேண்டும். திறந்தவெளிக் கிணறுகள் இருந்தால் அவற்றை பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாக மூட வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். விதிகளின்படி ஏலம் விட வேண்டும். அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யப்பட வேண்டும். பள்ளிகளின் மேற்கூரைகளில் மழைநீர் வழிந்தோடும் வகையில் குப்பை அகற்றப்படுவதுடன், மழைநீர் வழிந்தோடும் பாதை சரியாக உள்ளதா என்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்து பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்தும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை என்பது பள்ளிகள் திறந்த முதல் நாளில் இருந்தே நடத்தப்பட வேண்டும். குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை தீவிரமாக நடத்த ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் இருந்தால் அவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். இல்லம்தேடிக் கல்வி தன்னார்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்துப் பள்ளி வயது குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், முதல் பருவத்துக்கான நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கோடை விடுமுறைக்கு பின் 7ம் தேதி திறப்பு பள்ளிகளில் தூய்மைப்பணி செய்ய கல்வித்துறை அதிரடி உத்தரவு: முதல்நாளிலேயே மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம், சீருடை appeared first on Dinakaran.

Related Stories: