ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் தொடர்பாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக உலக வங்கி நிதி உதவியுடன் இந்த ஆண்டு 500 மின்சார பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. புதிதாக வாங்கப்படும் மாநகர பேருந்துகளை அரசு-தனியார் பங்களிப்புடன் ஓட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை போக்குவரத்து துறை ஆராய்ந்து வந்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி, சென்னை மாநகர போக்குவரத்தில் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தார். மேலும் அரசு வழித்தடங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படாது என்றும் ஊழியர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், 12 போக்குவரத்து பணிமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஊழியர்கள் நியமிக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்கள் மத்தியில் நேற்று முன்தினம் மாலையில் வேகமாக தகவல் பரவியது. இதனால் மாநகர பேருந்து ஓட்டுநர்கள் திடீரென்று ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துகளையும் பணிமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். நடுரோட்டில் பல மணிநேரம் தவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவித்தார். இதை ஏற்று பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கத்தினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து துறையை தனியார்மயமாக்க கூடாது. ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஏப்ரலில் ஸ்டிரைக் நோட்டீசு கொடுத்துள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூன் 6ம் தேதிக்கு பிறகு ஸ்டிரைக் நடத்துவோம் என்று தெரிவித்தோம். மீண்டும் நாளை (இன்று) 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை இணை கமிஷனர் முன்னிலையில் போக்குவரத்து கழக நிர்வாகமும் நாங்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம். மற்ற தொழிற்சங்கத்தினர் வந்தாலும் ஆட்சேபனை இல்லை. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை (இன்று) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும் சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: