துறைமுக பொறுப்பு கழக ரூ.45 கோடி நிதி முறைகேடு முக்கிய நபருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை துறைமுக பொறுப்பு கழக நிதி 45.40 கோடி ரூபாயை முறைகேடு செய்த வழக்கில் முக்கிய நபருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுக பொறுப்பு கழகத்திற்கு கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கணக்கு உள்ளது. இந்த வங்கியில், 100.57 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு தொகையாக துறைமுக பொறுப்பு கழகம் வைத்திருந்தது. இந்த நிதியில், 45 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவில் இந்தியன் வங்கி நிர்வாகம் புகார் அளித்தது.

இந்த மோசடி தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், சென்னை துறைமுகம் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்ட ஆழ்வார்பேட்டையை சேர்ந்த கணேஷ் நடராஜன், விருகம்பாக்கத்தை சேர்ந்த இடைத்தரகர் மணிமொழி, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, சுடலைமுத்து உள்பட 30 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

இதுதொடர்பான வழக்கு, சென்னை சி.பி.ஐ 9வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் முக்கிய நபரான சுடலைமுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதி எஸ்.ஈஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறை நிர்வாகம் அளித்த மருத்துவ ஆவணங்கள் வாயிலாக, மனுதாரர் கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிகிறது. உதவியாளர் உதவியின்றி, மனுதாரர் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாது.

இது, பரிதாபகரமானது. நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாகி வருவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு இன்னும் நடைபெறவில்லை. அதனால், விரைவில் வழக்கு இறுதி கட்டத்தை எட்ட வாய்ப்பு இல்லை. எனவே, மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு நபர் உத்தரவாதத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரி முன்பு காலை நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post துறைமுக பொறுப்பு கழக ரூ.45 கோடி நிதி முறைகேடு முக்கிய நபருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: