டாஸ்மாக் கடையில வருது ‘கம்ப்யூட்டர் பில்’: ஆன்லைனில் பணம் செலுத்தலாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் ‘கம்ப்யூட்டர் பில்லிங் முறை’ விரைவில் அமலாகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்ட், கிரிடிட் கார்டு மூலமாக வாடிக்கையாளர்கள் மதுபானங்களுக்கு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பெற முடியும். கூடுதல் பணம் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை தடுக்க அவ்வப்போது மதுபானக்கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று தமிழகத்திலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு மது பானம் விற்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக, மதுவிலக்கு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: தமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. அண்மைக்காலமாக அரசு நிர்ணயித்ததைவிட மதுபானங்கள் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது என்று நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கேரளா போல தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளில் கம்ப்யூட்டர் பில்லிங் முறையை கொண்டு வர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இந்த நடைமுறையில், வாடிக்கையாளர்கள் முதலில் கவுன்டரில் கணினி பில்களை பெற்று, அடுத்ததாக அந்த பில்லினை கடையில் கொடுத்து மது பானங்களை வாங்கலாம். தற்போது இதுபோல, அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா என்பன குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

குறிப்பாக, கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள். அதேபோல, கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம். நகரங்களில் உள்ள கடைகளில் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. மேலும், ஜூன் மாத இறுதிக்குள் ஆன்லைனில் பரிவர்த்தனைகளான கியூஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஆலோசித்து வருகிறோம். இதனை இறுதி செய்யவதற்கான வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும்.

The post டாஸ்மாக் கடையில வருது ‘கம்ப்யூட்டர் பில்’: ஆன்லைனில் பணம் செலுத்தலாம் appeared first on Dinakaran.

Related Stories: