சிங்கப்பூர், ஜப்பானில் 9 நாள் பயணம் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் 9 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை, சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து தமிழர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்றார். அங்கு சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழில் அதிபர்களை சந்தித்து, சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி மாலை விமானம் மூலம் ஜப்பான் சென்றார். அங்கு ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் சென்று பார்வையிட்டார். ஜப்பான் வாழ் தமிழர்களையும் முதல்வர் சந்தித்து பேசினார்.

ஜப்பானில் 6 நாட்கள் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தரும்படியும், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும் நேரில் அழைப்பு விடுத்தார். ஜப்பான் நாட்டின் சுற்றுப்பயணத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டை சார்ந்த 7 நிறுவனங்களுடன் சுமார் ரூ.1000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டில் 9 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (31ம் தேதி) இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். மேலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு திமுக மாவட்ட செயலாளர்கள் செய்து வருகின்றனர்.

The post சிங்கப்பூர், ஜப்பானில் 9 நாள் பயணம் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார் appeared first on Dinakaran.

Related Stories: